சென்னை: கோயம்பேடு சந்தையில் வரும் 16ந்தேதி முதல்   சிறு மொத்த வியாபாரிகள் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த கோயம்பேடு சந்தை மக்களின் நலன் கருதி, கடந்த மே மாதம் 5ந்தேதி அதிரடியாக மூடப்பட்டது.  தொடர்ந்து, தற்காலிகமாக காய்கறி சந்தை திருமழிசையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

சென்னையில் தற்போது, கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க கடந்த செப்டம்பர் மாதம் 18ந்தேதி முதல் படிப்படியாக அனுமதி வழங்கப்பட்டது.  அத்துடன் கிருமிநாசினி, முக்கவசம், உடல்நிலை வெப்ப பரிசோதனை உள்பட பல்வேறு நெறிமுறைகளும் கடைபிடிக்க அறிவிறுத்தப்பட்டது.

முதல்கட்டமாக மளிகை மொத்தவிலைக் கடைகள் செப்டம்பர் 18ந்தேதி  திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  கடந்த செப்டம்பர் 28ந்தேதி முதல் காய்கறி மொத்த விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், பழங்கள், மலர் சந்தைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, சிறு மொத்த வியாபாரிகளின் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதுகுறித்து, நேற்று  சிஎம்டிஏ சார்பில் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, , கோயம்பேடு சந்தையில் சிறு மொத்த வியாபாரிகளுக்கு வரும் 16-ம் தேதி முதல் படிப்படியாக கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

முதல்கட்டமாக ஏ முதல் ஜி பிளாக் வரை,காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வந்த சிறு மொத்த வியாபாரிகள் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

2து கட்டமாக 23ந்தேதி முதல்,  எச் முதல் என் பிளாக் வரையிலான பழம் விற்பனையில் ஈடுபட்டு வந்த சிறு மொத்தம் வியாபாரிகளுள் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

3வது கட்டகமாக  வரும் 30-ம் தேதி முதல், சிறு மொத்த காய்கறி வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய அனுமதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிஎம்டிஏ வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டு நடைமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது,

கோயம்பேடு சந்தைக்கு வரும்  அனைத்து வாடிக்கையாளர்களும் மருத்துவத் துறையினரால் உடல் வெப்ப சோதனை மற்றும் தேவைப்படும் இதர பரிசோதனைகள் செய்த பின்னரே உள்ளே  நுழைய அனுமதிக்கப்படுவர்.

அங்காடிக்குள் 3 சக்கர பயணிகள் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்வது முற்றிலும் தடை செய்யப்படும்.

தனியார் கொள்முதல் மற்றும் சில்லறை வணிகம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

அங்காடிக்குள் உள்ள அனைத்து கடைகளிலும் முகக்கவசம், உடல் வெப்ப பரிசோதனை கருவி, கைகழுவும் திரவம் உள்ளிட்டவை வைத்திருக்க வேண்டும்.

கடை வியாபாரிகள் தங்களது கடைகளுக்குள் வியாபாரம் செய்ய வேண்டும். வெளியே மற்றும் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்வது அனுமதிக்கப்படாது.

கோயம்பேடு வணிக வளாகத்தில் பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்துகள் அனைத்தும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

வாரந்தோறும் ஒரு நாள் அங்காடிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

145 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது கோயம்பேடு காய்கறி மார்க்கெட்! மொத்த விற்பனை படு ஜோர்….