ஹிலாரி கிளிண்டன் பற்றி போலியாக முகநூலில் பதிந்தவர் சிறையில் அடைப்பு…

நியூயார்க்

மோசடிக் குற்றத்தில் ஜாமீன் கொடுக்கப்பட்ட ஒருவர் முகநூலில் ஹிலாரி கிளிண்டன் பற்றி பதிந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்தவர் மார்ட்டின் ஷிகரேலி.   இவர் பல மோசடிக் குற்றங்களில் ஈடு பட்டுள்ளதாக இவர் மேல் பல வழக்குகள் உள்ளன.  தவிர இவர் முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் பல விதமாக மோசடி செய்ததாகவும் பல குற்றாச்சட்டுக்கள் உள்ளன.  பல முறை கைது செய்யப்பட்டவர்.   அமெரிக்க இணைய உபயோகிப்பாளர்கள் மத்தியில் சூப்பர் வில்லன் என அழைக்கப்படுபவர்.

இவர் நடத்தி வந்த சிட்ஃபண்ட் மூலம் பல முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்துள்ளார். அந்த வழக்கில் 20 வருடங்கள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.  அதன் பின் ஐந்து மில்லியன் டாலர் பிணையில் வெளியே வந்துள்ளார்.  வந்தவர் முக நூலில் ஒரு பதிவு இட்டுள்ளார்.  அதில் கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்ட போது பயணத்தின் போது கொட்டிய அவருடைய தலைமுடி தன்னிடம் உள்ளதாகவும் அதை 5000 டாலருக்கு விற்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதையும் வாங்கத் துடிக்கும் அமெரிக்க செல்வந்தர்களிடையே இது ஆவலைத் தூண்டி பலரும் அவரை அணுகி உள்ளனர்.  இது வெளியே பரவவே,  ஹிலாரி பயணம் செய்த போது மார்ட்டின் சிறையில் இருந்ததாகவும், அதனால் அவரிடம் இருப்பது ஹிலாரியின் தலை முடி அல்ல என்றும் சொல்லப்பட்டது.   போலிசார் அவரை மீண்டும் கைது செய்தனர்.  வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.