இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மும்பை

மும்பை தீவிரவாத தடுப்புக் காவல்துறை கிரிக்கெட் வீரர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரஜா மோகன் தாஸ் என்பவரைக் கைது செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. நேற்று இந்திய அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே முதல் டெஸ்ட் பந்தயம் தொடங்கி உள்ளது இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இ மெயில் மூலம் ஒரு எச்சரிக்கைக் கடிதம் வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி இந்த மெயில் வந்துள்ளது.

அந்த மெயிலில் மேற்கிந்தியத் தீவுகளில் தற்போது பயணம் செய்து வரும்  இந்திய கிரிக்கெட் அணியினருக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. இது பலருக்கு அதிர்ச்சியை அளித்தது.அதையொட்டி மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு இது குறித்து புகார் அனுப்பப்பட்டது. அவர்கள் இந்த புகாரின் மீது விசாரணை நடத்தினர்

அதில் இந்த மெயிலை அனுப்பியவர் அசாம் மாநிலம் மோரி காவ் மாவட்டத்தி ல் உள்ள சாந்திப்பூரில் வசிக்கும் பிரஜா மோகன் தாஸ் என்று தெரிய வந்தது. அதை ஒட்டி அசாம் மாநிலம் விரைந்த காவல்துறையினர் அசாம் மாநில காவல்துறையின் உதவியுடன் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ஒரு சில மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவரை மும்பை அழைத்து வந்த தீவிரவாத தடுப்பு காவல்துறை அவரை ஆகஸ்ட் 26 வரை காவலில் எடுத்து விசாரணை செய்ய உத்தரவு பெற்றுள்ளது.  தற்போது அவரிடம்  தீவிர விசாரணை நடந்து வருகிறது.