வாஷிங்டன் :

மெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு அத்துமீறி உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட கூட்டத்தில் இந்திய கொடியுடன் ஒருவர் கலந்து கொண்டது இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்க வாழ் இந்தியர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கொடியுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பற்றி வருண் காந்தி, சசி தரூர் உள்ளிட்டோர் சமூக வலைதளத்தில் காரசார விவாதம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று குடியேறியிருக்கும் 54 வயதான, வின்சென்ட் சேவியர் எனும் வின்சன் பலதிங்கள் என்பவர் தான் இந்த போராட்டத்தில் இந்திய கொடியுடன் கலந்து கொண்டவர் என்று தெரியவந்திருக்கிறது.

இந்த தகவலை, தனது முகநூல் பக்கத்திலும், சசி தரூர் மற்றும் வருண் காந்தி ஆகியோரின் விவாதத்திற்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டரிலும் பதிவு செய்திருக்கிறார் வின்சென்ட் சேவியர்.

அதில், அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லுகள் அரங்கேறியுள்ளதால் அதனை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில், அதே உணர்வுடன் நானும் கலந்து கொண்டேன்.

மேலும், இந்த ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள், பல்வேறு நாட்டினரை சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து வியட்நாம், கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இந்தியர்கள் சார்பாக கலந்து கொண்ட எங்கள் குழுவில் 10 பேர் இருந்தனர், இதில் 5 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்று கூறியிருக்கிறார்.

ஜனநாயக முறைப்படி நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டதில் என்ன தவறு இருக்கிறது என்றும், இந்த ஆர்பாட்டத்தை சீர் குலைக்க கறுப்பின ஆதரவாளர்கள் செய்த சதி தான் நாடாளுமன்ற முற்றுகை சம்பவம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆர்பாட்டத்தில் 10 – 15 பேர் சுவரேறி குதித்து அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடிக்க காரணமாக இருந்தனர், என்று மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் வலதுசாரி கட்சியாக பார்க்கப்படும் டிரம்பின் குடியரசு கட்சியின் அழைப்பை ஏற்று வலதுசாரிகளுக்கு அல்லது ஒரு பிரிவினருக்கு ஆதரவாக நடக்கும் ஆர்பாட்டத்தில் நாட்டை அடையாளப்படுத்தும் விதமாக கலந்து கொள்வதற்கு யாருடைய அனுமதியை இவர் பெற்றார் என்பது தெளிவாக தெரியவில்லை.

மேலும், இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர் :

இந்த போராட்டத்தில் இவர் இந்தியாவை சேர்ந்த அல்லது அமெரிக்க வாழ் இந்தியர்களின் எந்த அமைப்பு சார்பாக கலந்து கொண்டார் என்பது குறித்தும்,

10 – 15 பேர் மட்டுமே சுவரேறி குதித்ததாக கூறிய நிலையில், நூற்றுக்கணக்கானோர் எப்படி நாடாளுமன்றத்தின் உள்ளே நுழைந்தனர் என்றும்,

https://twitter.com/AJSB05/status/1347398513441660932

53 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 10 பேர் மட்டுமே வன்முறையை தூண்டிவிட்டதாக கூறுவதும்

டிரம்புக்கு ஆதரவாக இந்தியர்கள் கலந்து கொண்டதாக கூறும் நிலையில் அங்குள்ள மற்ற இந்தியர்களுக்கு பைடன் ஆதரவாளர்களால் அச்சுறுத்தல் ஏதாவது இருக்கிறதா என்பது குறித்தும்,

இது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் என்ன நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றனர் என்பது குறித்தும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், அங்குள்ள பல்வேறு நாட்டினருக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவர் இந்திய கொடியுடன் செல்வதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.