டேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…

டெல்லி: தனிநபர்  தகவல் தரவு பாதுகாப்பு தொடர்பாக பிரபல நிறுவனங்களான பேடிஎம், கூகுள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

மத்தியஅரசு தனிநபர்  தரவு பாதுகாப்பு மசோதா 2019 கடந்த ஆண்டு நிறைவேற்றியது. இதில் அறிவுறுத்தப்பட்டுள்ள ஷரத்துக்கள் குறித்தும், அதில் உள்ள  பல்வேறு அம்சங்கள் தொடர்பாக, நாடாளுமன்றக் கூட்டுக் குழு (ஜேபிசி) விவாதித்து வருகிறது.

பாஜக எம்.பி. மீனாட்சி லேகியின் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு, தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா2019  குறித்து அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களை கேட்டறிந்து இதுதொடர்பான தகவல்களை சேகரித்தும் வருகிறது.

இந்த குழு, பிரபல ஆன்லைன் பண பரிவர்த்தனை நிறுவனங்களான பேடிஎம், கூகுள் உள்பட பல்வேறு ஆன்லைன் நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

அதன்படி, ஜேசிபி குழுவினர் முன்பி பேடிஎம், கூகுள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆஜராகினர். அப்போது,  நுகர்வோரின் தரவு பாதுகாப்பு தொடர்பாக பேடிஎம், கூகுள் நிறுவனங்களின் பிரதிநிதிகளிடமிருந்து யோசனைகளையும், விரிவான தகவல்களையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு சேகரித்தது.

இதனைத்தொடர்ந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வாகனங்கள் ஒருங்கிணைப்பு நிறுவனங்களான ஓலா, உபேர் ஆகியவற்றின் பிரதிநிதிகளை நாடாளுமன்றக் கூட்டுக் குழு அடுத்த வாரம் அழைக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.

அதன்படி,  ரிலையன்ஸ் ஜியோவின் பிரதிநிதிகள் நவம்பர் 4ம்தேதி நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதையடுத்து, ஓலா , உபேர் பிரதிநிதிகள் நவம்பர் 5ஆம் தேதியும், பாரதி ஏர்டெல், ட்ரூகாலர் பிரதிநிதிகள் நவம்பர் 6ஆம் தேதியும் அழைக்கப்படுட்டுள்ளனர்.

ஏற்கனவே டிவிட்டர், பேஸ்புக் மற்றும் அமேசான் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை இந்த குழு சமர்ப்பித்து உள்ளது. டிவிட்டர் நிறுவனம், இந்திய வரைபடத்தை தவறாகச் சித்திரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.  லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாகக் காண்பித்தது தொடர்பாக டிவிட்டர் நிறுவன அதிகாரிகளிடமும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.க்கள் விவரம்

இந்தகுழுவிற்கு தலைவராக மக்களவையிலிருந்து மீனாட்சி லேகி இருந்து வருகிறார். அவருடன், எஸ்.எஸ். அலுவாலியா, பி.பி. சவுத்ரி, சஞ்சய் ஜெய்ஸ்வால், ராஜ்யவர்தன் ரத்தோர், கிரீத் சோலாங்கி, தேஜஸ்வி சூர்யா, ராஜீவ் ராஜன் சிங், அஜய் பட், ஸ்ரீகாரந்த் ஷிண்டே, கனிமொழி, சவுகாதா ராய், எஸ். ஜோதிமணி, கவுரவ் கோகோய் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேலும்,  மாநிலங்களவையிலிருந்து பூபேந்தர் யாதவ், சுரேஷ்பிரபு, அஸ்வின் வைஷ்ணவ், ஜெய்ராம் ரமேஷ், விவேக்தங்கா, டெரெக் ஒ பிரையன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கின்றனர்.