இந்தூர்

பாஜகவை சேர்ந்த இரு சகோதரர்கள் பாபநாசம் படத்தில் வருவதைப் போல் கொலை செய்து ஏமாற்றியது கண்டறியப்பட்டுள்ளது.

மலையாளத்தில் வெளியான த்ருஷ்யம் என்னும் திரைப்படம் தமிழில் பாபநாசம் எனவும் இந்தியில் த்ரிஷ்யம் எனவும் எடுக்கப்பட்டது. தமிழில் கமலஹாசன் மற்றும் இந்தியில் அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடித்தனர். இந்தப் படத்தில் கமலஹாசன் தனது மகள் கொலை செய்த இளைஞரின் உடலை யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டு வேறு இடத்தில் இருப்பது போல் நாடகமாடுவார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜகதீஷ் கரோடியா என்னும் 65 வயதானவர் பாஜகவை சேர்ந்தவர். அவருடைய மகன்கள் அஜய், விஜய் மற்றும் வினய் ஆகியோரும் பாஜகவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஜகதீஷுக்கு டிவிங்கிள் என்னும் பெண்ணுடன் பழக்கம் உண்டாகி இருவரும் நெருக்கமானார்கள். இது மகன்களுக்கு பிடிக்கவில்லை. திடீரென ஜகதீஷ் வீட்டிலேயே வந்து டிவிங்கிள் வசிக்க தொடங்கி உள்ளார். இதனால் மகன்கள் மிகவும் ஆத்திரம் அடைந்தனர்.

அவர்கள் பாபநாசம் படத்தின் இந்திப் பதிப்பான த்ரிஷ்யம் படத்தை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து தங்கள் நண்பருடன் சேர்ந்து டிவிங்கிளை கொலை செய்துள்ளனர். அதன் பிறகு அவருடைய உடலை யாருக்கும் தெரியாமல் எரித்து விட்டனர். அதன் பிறகு ஒரு நாயின் உடலை ஒரு சிலருக்கு தெரியும்படி புதைத்தனர். அவர்கள் கேட்டதற்கு சரியாக பதில் கூறவில்லை.

டிவிங்கிள் காணாமல் போனது பற்றி காவல்துறையினர் விசாரித்த போது ஜகதீஷின் மக்ன்கள் ஒரு உடலை புதைத்தது வெளி வந்துள்ளது. அதை ஒட்டி அவர்களை கைது செய்த காவல்துறையினர் அந்த இடத்தை தோண்டிய போது நாயின் உடல் கிடைத்துள்ளது. ஆகவே மூவருக்கும் புதிய முறையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர். மூளைக்குள் மின் அலைகளை செலுத்தி கேள்வி கேட்கும் போது அவர்கள் கூறுவது உண்மையா இல்லையா என்பது தெரிய வரும்.

இந்த சோதனையின் மூலம அவர்கள் பொய் சொல்வதை அறிந்துக் கொண்ட காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் திரைப்படம் பார்த்து விட்டு அதே பாணியில் கொலை செய்து உடலை மறைத்து விட்டதாக கூறி உள்ளனர். அத்துடன் காவல்துறைய்னரை குழப்பவே நாயின் உடலை புதைத்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் தற்போது காவல்துறை காவலில் எடுக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து வருகிறது.