லிமா: ஊழல் வழக்கில் கைதுசெய்யப்படவிருந்த பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பிரேசில் நாட்டு கட்டுமான நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக, ஆலன் காரிசியா மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், அவரைக் கைது செய்வதற்காக அவரின் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றனர்.

அப்போது, தனது வழக்கறிஞரை அழைப்பதாக கூறிய ஆலன் கார்சியா, தனது படுக்கையறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். பின்னர், அந்த அறையிலிருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. தன் தலையில் தானே சுட்டுக்கொண்டார் அவர்.

இதனையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை, எவ்வளவோ முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் தற்போதைய அதிபர் மார்ட்டின் விஸ்காரா.

– மதுரை மாயாண்டி