Random image

ஜல்லிக்கட்டு போய் கம்பளா!: பீட்டாவின் பார்வை கர்நாடகத்தை நோக்கி…!

மிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய கடும் முயற்சி எடுத்து தோல்வி அடைந்த பீட்டா அமைப்பு தற்போது கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவை நோக்கி தனது பார்வையை திருப்பியுள்ளது.

கர்நாடகத்தில் கம்பளா எனும் எருமை ஓட்டப்பந்தயப் போட்டி பாரம்பரிய விளையாட்டாகும்.  இந்தப் போட்டி கர்நாடகாவில் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு பகுதிகளில் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக கடலோர மாவட்டங்களாக உடுப்பி, தக்ஷின ஆகிய இடங்களில் இது புகழ்பெற்ற விளையாட்டாக விளங்குகிறது.

சேறு நிரம்பியிருக்கும் வயல்பகுதிகளில் எருமைகளை  வண்டிகளில் பூட்டி, அதன்பின்னே விவசாயிகளும் சேர்ந்து ஓடுவார்கள். இந்த போட்டியை நடத்தினால் விவசாய விளைச்சல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை கர்நாடக மக்கள் நிலவுகிறது.

மேலும் இதை வீர விளையாட்டாக மக்கள் கருதுகின்றனர்.

இந்தப் போட்டியில் எருமைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக விலங்குகள் நல அமைப்பான பீட்டா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த வருடம் தடை பெற்றது. பிறகு கர்நாடக அரசால் அவசரச்சட்டம் இயற்றப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதையடுத்து இந்த வருட  தொடக்கத்தில் பீட்டா மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் கம்பளா போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்த்து. மேலும் கர்நாடக அரசு இயற்றிய சட்டம் காலவதியாகி விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் பீட்டாவின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனால் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் கம்பளா போட்டிகள் கர்நாடகத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கம்பளா போட்டியை தடை செய்ய வேண்டும் என கோரியிருக்கிறது. நவம்பர் மாதத்திற்கு இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில் இந்த புதிய மனுவை பீட்டா தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.