முத்தலாக் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு

டில்லி:

முத்தலாக் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் 19-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 3 அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் முதல் முறை, முத்தலாக் தடுப்பு சட்டத்தில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம்.

2வது முறை முத்தலாக் வழங்கியபின் கணவன் மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேரலாம். 3வது முறை முத்தலாக்கில் கணவன், மனைவியின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்கலாம். இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் இச்சட்டத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ‘‘இஸ்லாமிய ஆண்களை குறிவைப்பது போன்று சட்டத்தில் விதிகள் இடம்பெற்றுள்ளது. இஸ்லாமிய ஆண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு 28-ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவசர சட்டத்தை எதிர்த்து, கேரளாவை சேர்ந்த ‘சமஸ்தா கேரளா ஜமிய்யதுல் உலமா’ என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில்,‘‘அவசர சட்டம் தன்னிச்சையானது. பாரபட்சமானது. அரசியல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளது. . ஆகவே, அதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். ஒரு மதத்தை குறிவைத்து பிறப்பிக்கப்பட்ட இச்சட்டத்தால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.