டில்லி:

வழக்கு ஒதுக்கீடு விவகாரங்களை 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் முடிவு செய்யக் கோரி உ ச்சநீதிமன்றத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் மனு தாக்கல் செய்துள்ளார்.

மூத்த வக்கீலும் முன்னாள் சட்ட அமைச்சருமான சாந்தி பூஷன் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒதுக்கீடு செய்வதை தலைமை நீதிபதி மட்டுமே செய்யக் கூடாது. 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியத்துக்கு தான் இந்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

‘நீதிபதிகள் பட்டியலின் தலைவன்’ (மாஸ்டர் ஆப் ரோஸ்டர்) என்ற அடிப்படையில் வழக்கு ஒதுக்கீடு செய்வதில் எந்த வகையான நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை தலைமை நீதிபதியால் பின்பற்றப்ப டுகிறது என்பதை உச்சநீதிமன்ற நிர்வாக அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘‘வழிகாட்டி இல்லாமலும் விருப்பத்தை தடையின்றி செயல்ப டுத்தும் அதிகாரம் கொண்டவராகவும், தன்னிச்சையாகவும் தலைமை நீதிபதி செயல்பட முடியாது. இது சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் கவிழ்த்துவிடும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘‘இந்த மனுவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா எதிர்வாதியாக உள்ளார். இதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விசாரிக்க கூடாது. இந்த நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்யவும் கூடாது. மூன்று மிக மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் இந்த வழக்கை பட்டியலிடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும்’’ என்று பூஷன் உச்சநீதிமன்ற செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வழக்கு விசாரணை பட்டியல் தயாரிப்பதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னிச்சையாக முடிவு செய்வதாக கடந்த ஜனவரியில் மூத்த நீதிபதிகள் 4 பேர் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இதே பிரச்னை தொடர்பாக தலைமை நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.