சென்னை

குடியிருப்பு சங்கங்கள் குடியிருப்பு அளவுக்கு ஏற்ப பராமரிப்பு கட்டணம் வசூலிக்க உத்தரவு இடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில் பல குடியிருப்புக்களில் சங்கம் அமைத்து அந்த சங்கம் பராமரிப்பு கட்டணம் வசூலித்து அதில் பராமரிப்பு செலவைச் செய்து வருகிறது.   இதில் பெரும்பாலான இடங்களில் ஒவ்வொரு குடியிருப்புக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு ஒருவர் 1000 சதுர அடி குடியிருப்பில் வசூலித்தாலும் அல்லது 750 சதுர அடி குடியிருப்பில் வசித்தாலும் ஒரே தொகை வசூலிக்கப்படுகிறது.   இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   இதையொட்டி வடபழனியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் விருத்தகிரி என்பவர் சென்னை  உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர், “நான் வடபழனியில் உள்ள ஆற்காடு டெரஸ் குடியிருப்பில் வசித்து வருகிறேன்,   இங்கு 82 இரட்டை படுக்கை குடியிருப்புக்களும் 88 மூன்று படுக்கை குடியிருப்புக்களும் உள்ளன.  குடியிருப்புக்களின் அளவு 846 சதுர அடியில் இருந்து 1513 சதுர அடி வரை உள்ளன.  ஆனால்  இங்கு அனைத்து குடியிருப்பு வாசிகளிடமிருந்தும் ரூ. 3000 பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பல குடியிருப்புக்கள் சங்கம் அனைத்து குடியிருப்புக்களுக்கும் ஒரே அளவில் பராமரிப்பு கட்டணம் வசூலித்து வருகிறது.   இதன் மூலம் சமமாக இல்லாதவர்கள் சமமாக கருதப்பட்டு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.   எனவே குடியிருப்புக்களின் அளவுக்கு ஏற்றபடி பராமரிப்பு கட்டணம் வசூலிக்க சங்கங்களுக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை நீதிபதி ஆதிகேசவலு விசாரித்து வருகிறார்.  அவர் இது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி மனுதாரர் வசிக்கும் ஆற்காடு டெரஸ் உரிமையாளர் மற்றும் வசிப்போர் சங்கத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.  இந்த சங்கம் தனது விளக்கத்தை அடுத்த மாதம் 22 ஆம் தேதிக்குள் அளிக்க  வேண்டும் என தெரிவித்த நீதிபதி வழக்கை அதே தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்த வழக்கில் மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டால் அது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குடியிருப்புகளாலும் பின்பற்ற வேண்டிய நிலை உண்டாகும்.    இதனால் பல சங்கங்கள் தங்களது  பராமரிப்பு கட்டணத்தை குடியிருப்பு அளவுக்கு ஏற்றபடி மாற்ற வேண்டி இருக்கும்.