அதிமுக ஆட்சியை கலைக்க ஆளுநரிடம் மனு அளித்திருக்கிறோம்: மு.க. ஸ்டாலின்

அதிமுக ஆட்சியை கலைக்க ஆளுநரிடம் மனு அளித்திருப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவை மு.க. ஸ்டாலினஅ நேரில் சந்தித்தார். மனு ஒன்றையும் அளித்தார்.

கவர்னர் ராவ் – ஸ்டாலின் (பைல் படம்)

தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனு அளித்துவிட்டு ஆளுநர் மாளிகைக்கு வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “பிப்ரவரி 18ஆம் தேதியன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது நாங்கள் ரகசிய வாக்கெடுப்பு கோரினோம். ஆனால் அதற்கு மறுத்து விட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

அப்போது எங்களை அடித்து காயப்படுத்தி வெளியில் தூக்கி வீசினர். அன்றே, நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்தோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் கோடி கோடியாக பணம் பெற்றதாக எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோ டைம்ஸ் நவ் டிவியில் ஒளிபரப்பானது. அதை சட்டசபையில் விவாதிக்க கோரினோம்.

ஆனால் ஆதாரம் இல்லாமல் பேச முடியாது என்று சபாநாயகர் கூறி விட்டார். நாங்கள் பேசியதையும் அவை குறிப்பில் இருந்து நீக்கி விட்டார். ஆகவே வீடியோ ஆதாரம் அடங்கி சிடியை சபாநாயகரின் அறையில் கொண்டு போய் கொடுத்தோம்.

திங்கட்கிழமை சட்டசபை நடைபெறும் போது அது குறித்து விவாதம் நடத்த அனுமதிப்பார் என்று நம்புகிறோம். இன்று ஆளுநரிடம் மனு அளித்திருக்கிறோம். அதில் வீடியோ ஆதாரத்தையும் அளித்திருக்கிறோம்”என்று தெரிவித்தார்.