டில்லி:

யோத்தி சர்ச்சைக்குரிய நிலம் விவகாரம் தொடர்பான வழக்கை  முன்கூட்டியே விசாரிப்பது குறித்து ஆராயப்படும்  உச்சநீதிமன்றற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்து உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

மத்தியஸ்தர்களின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், வழக்கை உச்சநீதி மன்றமே நேரிடையாக விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி  விவகாரம் தொடர்பான  மேல்முறையீடு வழக்குகள்  உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்சில் கடந்த ஜனவரி மாதம் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட  நிலையில், விசாரணை நீதிபதிகள் விலகியதை தொடர்ந்து, வழக்கு விசாரணை தள்ளிப்போனது.

அதையடுத்து  அயோத்தி வழக்கின் விசாரணை  நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில்,  நீதிபதிகள் பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷன், அப்துல் நாசர் கொண்ட 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம்  26-ம் தேதி  விசாரணை நடத்தியது. அப்போது நடைபெற்ற  விசாரணையின்போது,  அயோத்தி நில உரிமை தொடர்பாக சுமூக முறையில் தீர்வு காணும் வகையில்  மத்தியஸ்தர்கள் குழுவை உச்சநீதி மனற்ம் அமைத்தது.

அதன்படி,  முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி எம்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்,  மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு 8 வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

மத்தியஸ்தர்களின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம், அவர்களின் அவகாசத்தை ஏற்றுக்கொண்டு, ஆகஸ்டு 15ந்தேதிவரை அவகாசம் வழங்கியது.

இநத நிலையில், அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு தாக்கல் செய்தவர்களில் ஒருவரான கோபால் சிங் விஷாரத் என்பவர்,  உச்சநீதிமன்றத்தை அணுகி  அயோத்தி வழக்கை விரைவாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

அப்போது, அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக,  இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர்களால் அதிக முன்னேற்றம் காண முடியவில்லை என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், கோபால் சிங் விஷாரத்தின் வழக்கறிஞரிடம், தங்களது கோரிக்கையை குறித்து ஆராய்வேன் என்று கூறி உள்ளார்.

இதன் காரணமாக அயோத்தி மேல்முறையீடு வழக்கு மீண்டும் உச்சநீதி மன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியஸ்தர் குழுவினரின் அவகாசம் அடுத்த மாதம் 15ந்தேதி முடிவடைய உள்ள நிலையில், மத்தியஸ்தத்தில் அதிக முன்னேற்றம் இல்லாததால், முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதி மன்றம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.