சென்னை,

மிழகத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கு தேவையான இடம் ஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்த தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தற்போது நிலம் எதுவும் ஒதுக்கப்படவில்லை என்று கூறி உள்ளார்.

ஏற்கனவே   இந்த திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த, தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,  ”பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படுவதன் நோக்கம் என்ன என்பது எனக்குத் தெரியாது. அதுபற்றி நான் ஆய்வு செய்வேன். அதன்பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்வருடன் நான் விவாதிப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தற்போது கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்துக்கு  நிலம் எதுவும் கொடுக்கப்பட வில்லை என்று தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

 

தமிழகத்தில்  கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படுவதாக தமிழக அரசின் அரசிதழில் கடந்த 19-ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

அதில், இந்த மாவட்டங்களில்ர  45 கிராமங்கள் பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தைத் தொடர்ந்து அவற்றில் உள்ள 57,345 ஏக்கர் நிலப்பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய நகரியம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நகரியத்தை நிர்வகிக்க உறுப்பினர், செயலர் நிலையில் ஓர் அதிகாரி அமர்த்தப்படுவார் என்றும், அங்கு அமைக்கப்படவுள்ள பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் சார்ந்த அனைத்து தொழில்களுக்கும் உறுப்பினர் செயலரே அனுமதி அளிப்பார் என்றும் தமிழ்நாடு வீட்டுவசதித் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்திருக்கிறார்.

சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த திட்டம் காரணமாக நாகை, கடலூர் மாவட்டங்களை பெட்ரோலியம் மற்றும் ரசாயனக் காடுகளாக  மாறி விடும் என்று திமுக, பாமக உள்பட அனைத்து கட்சியினரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இதற்கான நிலம் ஒதுக்கீட்டுக்கான உத்தரவை தமிழக அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், செய்தியாளர்களின் கேள்விக்கு, இத்திட்டத்தின் நோக்கமே தெரியாது என்று பதில் கூறுகிறார். ஒரு திட்டம் குறித்து ஏதும் தெரியாமல் அமைச்சர் எப்படி அனுமதி கொடுத்தார் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஒருவேளை அமைச்சருக்கே தெரியாமல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா என்றும் பாமக  கேள்வி எழுப்பி உள்ளது.

இந்நிலையில், கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்துக்கு நிலம் எதுவும் கொடுக்கப்படவில்லை, இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று கோவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.