பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு: அருண்ஜெட்லி அறிவிப்பு

டில்லி:

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாகனங்களின் போக்குவரத்து  சேவை கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரத்தொடங்கி உள்ளன.

வரலாறு காணாத இந்த விலை உயர்வுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஒடிசாவில் ஒரு பெட்ரோல் பங்கை பொதுமக்கள் அடித்து உதைத்து சூறையாடினர். ஒரு சில இடங்களில் பெட்ரோல், டீசல் வாங்குபவர்களுக்கு பரிசுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் இன்று காலை,  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்றுள்னர்.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி,  பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்படும் என  அறிவித்தார்.

பெட்ரோல், டீசல் மீதான விலையில் லிட்டருக்கு ரூ.1.50 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களும் லிட்டருக்கு ரூ.1 குறைக்க இருப்பதால் மொத்தமாக ரூ.2.50 குறைக்கப்படும் என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இதுபோல மாநில அரசுகளும் தங்களின் வரியை குறைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.