சேலம்:

தி.மு.க. முன்னாள் எம்.பி செல்வகணபதி வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக இருப்பவர் டி.எம். செல்வகணபதி. முன்னாள் எம்பி. இவரது வீடு, சேலம் ராம் நகர் பகுதியில் உள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு இவரது வீட்டின் மர்ம நபர்கள்  பெட்ரோல் குண்டு வீசினர். இதில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனம் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அஸ்தம்பட்டி காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செல்வகணபதி நேற்று சென்னை சென்று இருந்த நிலையில் இச்சம்பவம் நடந்திருக்கிறது.

சேலம் மாவட்ட  திமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக நேற்று காலை இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் ஆதரவாளர்கள் நான்கு பேர் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், செல்வகணபதி வீடு மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டுள்ளது.

ஆகவே உட்கட்சிப் பூசல் காரணமாக இந்த குண்டுவீச்சு சம்பவம் நடந்திருக்குமோ என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.