டி.டி.வி. வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: அ.ம.மு.க. நிர்வாகி மீது குற்றச்சாட்டு

.ம.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியது, அதே கட்சியைச் சேர்ந்த நிர்வாகி என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அ.ம.மு.க. துணைப்பொதுச்செயலாளரும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரனின் இல்லம் சென்னை அடையாறு பகுதியில் உள்ளது.

 

இங்கு சற்று நேரத்துக்கு முன் இருசக்கரவாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி தப்பிச்சென்றனர். இதில், அவரது கார் ஓட்டுநர் பாண்டியன் மற்றும் புகைப்படக் கலைஞர் டார்வின் ஆகியோர் காயமடைந்தனர். மேலும், தினகரன் வீட்டு காவலாளியும், புகைப்படக்காரர் ஒருவரும் காயமடைந்தனர்.

மேலும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த தினகரனின் கார் கண்ணாடிகள் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் அதே கட்சியைச் சேர்ந்த காஞ்சி நகர முன்னாள் செயலாளர் பரிமளம் மீது குண்டு வீசியதாக தினகரன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

 

இது குறித்து  அடையாறு துணை ஆணையர் செஷாங் சாய் தெரிவித்துள்ளதாவது:

“காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லட் பரிமளம் என்பவர் அ.ம.மு.க.வின் நகர செயலாளராக இருந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்த துணைப்பொதுச்செயலாளர் தினகரன், அவரை கட்சியைவிட்டு நீக்கியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டிடிவி தினகரன் இல்லம் முன்பு கோஷம் எழுப்பிய புல்லட் பரிமளம் தனது ஓட்டுனர் சுப்பையா என்பவருடன் சேர்ந்து பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.

இதனால் பரிமளத்திற்கு சிறிய அளவில் தீக்காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டுனர் சுப்பையா காவல்துறை விசாரணையில் இருக்கிறார்” என்று    செஷாங் சாய்  தெரிவித்தார்.