கர்ணன் படம் திரையிடப்பட்டுள்ள தூத்துக்குடி திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடி

ர்ணன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தூத்துக்குடி திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் வெளியாகி உள்ளது.   இந்த படத்துக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது.  நேற்று இரவுக் காட்சியின் போது திரைப்படத்தை காண வந்த 5 பேர் குடிபோதையில் இருந்ததால் அவர்களை அனுமதிக்க மறுத்த ஊழியர்கள் டிக்கட் பணத்தைத் திருப்பி கொடுத்து அனுப்பி விட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 5 பேரும் மீண்டும் இரவு சுமார் 11 மணிக்குத் திரையரங்குக்கு வந்து திரையரங்கு வளாகத்துக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர்.   அவர்கள் 5 குவார்ட்டர் மது பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி வீசியதில் தரையில் விழுந்து வெடித்துள்ளது.  இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.   இதையொட்டி காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திரையரங்கு வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிரா பதிவை ஆய்வு செய்து குண்டு வீசியவர்களைத் தேடி வருகின்றனர்.  இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த குண்டு வீச்சு சம்பவம் தூத்துக்குடி நகரில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.