கொழும்பு,

லங்கையில் பெட்ரோல் விநியோகம் அத்தியாவசிய சேவை என்ற இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் அரசு பெட்ரோலிய துறை பணியாளர்களின் தொடர் பணி புறக்கணிப்பு போரட்டத்தையடுத்து எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகம் அத்தியாவசிய சேவை என சிறிசேனா தலைமையிலான இலங்கை அரசு அறிவித்து உள்ளது.

இலங்கையில், பெட்ரோல் விநியோக நிறுவனங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஏப்ரல் 24ந்தேதி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கின. பின்னர் அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தயை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், அரசு உறுதிமொழி அளித்தபடி கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி,பெட்ரோலிய துறை சார்ந்த பணியாளர்கள் கூட்டுத் தொழிற்சங்கம் மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதன் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல் விநியோகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. பெட்ரோல் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் விநியோக சேவை அத்தியாவசமான என இலங்கை அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து  அரசு ஆணை நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் ஃபெர்ணான்டோ இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.

அதில்,  பெட்ரோலிய உற்பத்தி பொருட்கள் மற்றும் வாயு பொருட்களை வழங்குதல், விநியோகம் செய்தல் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துறைமுகங்களிலுள்ள கொள்கலன்களிலிருந்து எண்ணெய் அல்லது எரிபொருட்களை வெளியேற்றுதல், எடுத்து செல்லல், விநியோகம் உள்ளிட்ட பணிகளும் இந்த சேவையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். பணிக்கு திரும்பாதவர்கள் தங்கள் பணிகளை விட்டு விலகியவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்றும் பெட்ரோலிய தொழிற்சங்கங்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் 2வது நாளாகவும் தொடர்கிறது.

அதன் காரணமாக அரசு பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலன்னாவ எரிபொருள் கிடங்கின் பிரதான நுழைவாயிலை போலீஸார் திறக்க முயன்றபோது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அதையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டது.

அங்கிருந்த பணியாளர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து எரிபொருள் விநியோக பணிகளுக்கு முப்படையினரின் உதவி கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இன்று காலமுதல் ராணுவ உதவியுடன் எரிபொருள் விநியோகம் கொலன்னாவ கிடங்கிலிருந்து பெட்ரோலிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள்  எதிர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில்  அமைதியற்ற சூழ்நிலை நிலவுவதாக கூறப்படுகிறது.

 

இதற்கிடையில்,  பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பொது மக்கள் நலன் கருதி பணிப் புறக்கணிப்பை கைவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று மாலைக்குள் இலங்கையில்  எரிபொருள் விநியோம் சகஜ நிலைக்கு கொண்டு வர முடியும் என அமைச்சரவை அமைச்சர் ராஜித சேனாரத்ன நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக இலங்கையில் பரபரப்பு நிலவி வருகிறது.