நீச்சல் உடையுடன் இலவச பெட்ரோல் வாங்க குவிந்த ஆண்கள்! காரணம் இதுதான்!

மாஸ்கோ: ரஷியாவில் நீச்சல் உடை அணிந்து வருபவர்களுக்கு இலவச  பெட்ரோல் வழங்கப்படும் என்று அறிவிப்பால், ஏராளமான வாடிக்கையாளர்கள் பெட்ரோல் நிலையத்தில் குவிந்தனர்.

அந்நாட்டின் சமாரா நகரில் பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்று இருக்கிறது. அந்த நிலையத்தை மக்களிடம் பிரபலப்படுத்த அதன் உரிமையாளர் ஒரு நூதன முயற்சியை மேற்கொண்டார்.

அதாவது, பெட்ரோல் விற்பனை நிலையம் திறந்த முதல் 3 மணி நேரத்துக்குள் நீச்சல் உடையில் வரும் அனைவருக்கும் இலவச பெட்ரோல் வழங்கப்படும் என்பது தான் அந்த அறிவிப்பு. நினைத்ததற்கு மாறாக அந்த அறிவிப்பு வேறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

பெண்கள் நீச்சல் உடையில் வந்து பெட்ரோலை பெற்று செல்ல, பெட்ரோல் நிலையம் பிரபலமாகிவிடும் என்று உரிமையாளர் நினைத்தார். ஆனால் நடந்த கதையே வேறு.

இலவச பெட்ரோல் என்ற அறிவிப்பு பிரபலமானதும், ஏராளமான ஆண்கள் நீச்சல் உடையுடன் பெட்ரோல் நிலையத்தில் குவிந்தனர். அதனால் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் திணறினர்.

ஆண்கள் நீச்சல் உடையில், வாகனங்களுக்கு பெட்ரோல் வாங்கி சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. நீச்சல் உடை அணிந்து வர வேண்டியவர்கள் ஆண்களா, பெண்களா என விளம்பரத்தில் குறிப்பிடாததால் இந்த குழப்பம் ஏற்பட்டது.