Random image

பெட்ரோல் விலை லிட்டருக்கு 72 காசு! : அந்த நாட்டில் எப்படி இது சாத்தியமானது?

கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர் அ. குமரேசன்

பெட்ரோல் பங்க்கில் பலரும் அரை லிட்டர் போடுங்கள், ஒரு லிட்டர் போடுங்கள், இரண்டு லிட்டர் போடுங்கள் என்று சொல்வதில்லை. ஐம்பது ரூபாய்க்குப் போடுங்கள், நூறு ரூபாய்க்குப் போடுங்கள், இருநூறு ரூபாய்க்குப் போடுங்கள் என்றுதான் சொல்கிறோம். இனிமேல், ஒரு நூறு மில்லி போடுங்கள், இருநூறு மில்லி போடுங்கள் என்று சொல்கிற நாள் நெருங்கிக்கொண்டிருப்பது தெரிகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அல்லது டீசலுக்கு ரூ.–– (இதைப் படிக்கிறபோது என்ன விலையோ அதை இட்டு நிரப்பிக்கொள்க) கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று புலம்புகிறவர்களுக்கு ஒரு நற்செய்தி: ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.120 – ஐஸ்லாந்து நாட்டில்!

இந்தியாவில் இப்போது இப்படி பெட்ரோல் நிலையக் குழாய் எந்திரத்தின் டிஜிட்டல் திரையில் தினமும் காலையில் விலையை மாற்றி செட் பண்ண வேண்டியிருக்கிற நிலைமை. அது பற்றிய குமுறலில் இருப்போருக்குக் கூடுதல் குமுறலாக இதோ ஒரு தகவல்: உலகிலேயே மிக மிகக்குறைந்த விலையில் பெட்ரோல் டீசலை மக்களுக்கு வழங்குகிற நாடு ஒன்று இருக்கிறது, அது வெனிசுலா. அங்கே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஒரு ரூபாய்க்கும் குறைவு; இன்றைய நிலவரப்படி 0.01 டாலர் – இந்தியப் பண மதிப்பில் 72 காசு! டீசல் விலை இன்னும் குறைவு 0.008 டாலர் – நம் ஊர் கணக்குப்படி 58 காசு! இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெட்ரோல் விலையை இந்த அளவுக்கு “உயர்த்திய” வெனிசுலா அரசு, டீசல் விலையில் கைவைக்கவில்லை. அதற்கு அந்நாட்டுக் குடியரசுத் தலைவர் நிக்கோலஸ் மதுரோ கூறிய காரணம், “டீசல் விலையை உயர்த்தினால் மற்ற பல நுகர்வுப் பொருள்களின் விலை அதிகரித்துவிடும், ஆகவே பெட்ரோல் விலையை மட்டும் உயர்த்துகிறோம்,” என்பதுதான்!

சாத்திய ரகசியம்

எப்படி அங்கே இது சாத்தியமாகிறது? அந்நாட்டு மண் இயற்கையாகவே எண்ணை வளம் மிகுந்தது என்பதாலா? அப்படியானால் எண்ணை வளம் மிகுந்த மற்ற நாடுகளில் இந்த அளவுக்குக் குறைவான விலையில் மக்களுக்குக் கிடைப்பதில்லையே? அரசு மாநியம் கொடுப்பதாலா? இவ்வளவு அநியாயத்துக்கு மாநியம் கொடுத்தால் நாட்டின் பொருளாதாரம் என்னவாவது என்று தொலைக்காட்சிப் பொருளாதார வல்லுநர்கள் கேட்பார்கள். ஆனால், வெனிசுலாவின் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. பிறகு எப்படித்தான் சாத்தியமாகிறது?

நம் ஆட்சியாளர்களுக்குக் கசப்பாக இருக்கிற பொருளாதாரக் கொள்கைதான் காரணம். குடிநீர் போலக் குடிமக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புள்ள அடிப்படைத் தேவைகளாகப் பெட்ரோலும் டீசலும் இருக்கின்றன என்பதிலிருந்து உருவான கொள்கை அது. இங்கேதான் குடிநீரையும் தினமும் சைக்கிளில், டூவீலரில், ட்ரைசைக்கிளில், மினிவேன்களில் கொண்டுவருவோரிடமிருந்து வீட்டிற்கு இறக்குமதி செய்துகொள்ள வைத்திருக்கிற கொள்கை அரசாள்கிறதே! உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது பாட்டில்களில் குடிநீர் அடைத்து விற்பதற்காக நதிப்படுகைகளை ஒப்பந்தத்திற்கு விடுகிற கொள்கை அரசாள்கிறதே! மத்திய அரசுத்துறையே ஓட்டுகிற ரயில்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீரைப் பயணிகளுக்கு விலையின்றித் தருவது அரசாங்கத்தின் கடமை என்பது மறுக்கப்பட்டு, ‘ரயில் நீர்’ பாட்டில் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறதே! மாநில அரசின் கீழுள்ள பேருந்து நிலையங்களில் குடிநீர் வழங்கும் பொறுப்பு கைவிடப்பட்டு, 10 ரூபாய்க்கு அம்மா குடிநீர் விற்கப்படுகிற கருணை மேலோங்கியிருக்கிறதே! இப்படியான நாட்டில் பெட்ரோலையும் டீசலையும் அடிப்படைத் தேவைகள் என்று அங்கீகரிப்பதாவது, குறைந்த விலையில் கிடைக்கச் செய்வதாவது?

வெனிசுலாவில் நடைமுறைப்படுத்தப்படுகிற கொள்கை, உலகச் சந்தையையும் அரசியலையும் புற்றுநோயாகக் கவ்விக்கொண்டிருக்கிற அமெரிக்க ஏகாதிபத்தியக் கைகளைத் தடுத்து வெளியே தள்ளிய குடியரசுத்தலைவர் ஹுகோ சாவேஸ் ஆட்சியிலேயே நிலைநாட்டப்பட்டது. தனது உடலைக் கவ்விய புற்றுநோயால் ஐந்து ஆண்டுகளுக்கு முன், தனது 59வது வயதில் மரணமடைந்த சாவேஸ், 1999 முதல் 2013 வரையில் அரசுத்தலைவராக இருந்த 14 ஆண்டுகளில், அடிப்படையான கொள்கை மாற்றங்களை வலுவாக ஊன்றினார். சமூக சமத்துவத்திற்கான சோசலிசக் கொள்கைகளை வெனிசுலா மண்ணுக்கு ஏற்ற வகையில் அவரது தலைமையிலான வெனிசுலா ஐக்கிய சோசலிசக் கட்சி (யுஎஸ்பிவி) அரசு உறுதியான அடிக்கட்டுமானங்களோடு தொடங்கியது. இன்று நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான அரசு அக்கொள்கைகளை அதே உறுதியோடு தொடர்கிறது. அந்தக் கொள்கைகளில் ஒன்றுதான் பெட்ரோலிய விலைக்கொள்கை.

அவர்களை ஆத்திரப்படுத்திய அரசுடைமை

சாவேஸ் ஆட்சிப்பொறுப்புக்கு வரும் வரையில் வெனிசுலாவில் நிலைமை எப்படி இருந்தது? எண்ணைக் கிணறுகள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிடியில் இருந்தன. உள்நாட்டு நிறுவனங்கள் அந்த வெளிநாட்டு நிறுவனங்களின் ஒப்பந்த நிறுவனங்களாக இருந்தன. குறிப்பாக வெனிசுலா எண்ணைக் கிணறுகளைத் தங்கள் கையில் வைத்திருந்தவை அமெரிக்க நிறுவனங்கள்தான். அவர்கள் உலகச் சந்தைக்குக் கொண்டுபோனது போக எஞ்சியதுதான் உள்நாட்டுத் தொழில்களுக்கும் மக்களுக்கும். அவர்கள் கொடுப்பதுதான் ஊதியம். அவர்கள் நிர்ணயிப்பதுதான் விலை. எண்ணைப் பொருளாதாரம் மட்டுமல்லாமல், வெனிசுலாவின் மொத்தப் பொருளாதாரத்தையும் அமெரிக்க நிறுவனங்களும், அவற்றின் பின்னாலிருந்த அமெரிக்க அரசும்தான் ஆட்டுவித்தன. நாட்டின் அரசியல் களம், இதர தொழில்கள், விவசாய நிலைமை, கல்விச் சூழல், மருத்துவ வாய்ப்பு, சமூக வாழ்க்கை, பண்பாட்டுத் தளம் என அனைத்திலும் இந்த ஆக்கிரமிப்பின் தாக்கம் இருந்து வந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது சாவேஸ் தலைமையிலான யுஎஸ்பிவி அரசு. அவரது அரசின் மிக முக்கியமான நடவடிக்கையாக எண்ணை வளம் தேசவுடைமையாக்கப்பட்டது. பல ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் எண்ணை உற்பத்தி, விநியோகம் தொடர்பான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அந்த ஒப்பந்தங்களில், எண்ணை வணிக வருவாயின் பெரும்பகுதி வெனிசுலா அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்பது முக்கிய நிபந்தனையாக்கப்பட்டது. லத்தீன் அமெரிக்கப் பகுதியில் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த வெனிசுலாவில், அடிப்படைத் தேவைப் பொருளாக அறிவிக்கப்பட்ட பெட்ரோலும் டீசலும் மக்களுக்கு மேற்கூறிய மலிவு விலையில் கிடைக்கத் தொடங்கியது.

இந்த நடவடிக்கையோடு மட்டும் நிறுத்தியிருந்தால் பெரும் சுமையை அநத் நாடு எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்தான். ஆனால் எண்ணை வளம் மட்டுமல்லாமல், இயற்கை எரிவாயு, இரும்பு, சிமென்ட், உணவு உற்பத்தி, மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகிய துறைகளும் அரசுடைமையாக்கப்பட்டன. பினாமிகள், பங்குச் சந்தைச் சூதாட்ட நிறுவனங்களின் வேலிகளுக்குள் இருந்த லட்சக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள, சாகுபடி செய்யப்படாமலிருந்த நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன. அமெரிக்க அரசு/நிறுவனங்களின் கணக்குகளுக்கேற்ப ஆட்டுவிக்கப்பட்டு வந்த எண்ணைச் சந்தை விடுவிக்கப்பட்ட சீனா, ரஷ்யா, பிரேசில், ஈரான் ஆகிய நாடுகளுடன் முதலீடும் வணிகமும் சார்ந்த உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டன. இது திடீர்த் திடீரென அமெரிக்க அரசு சுழற்றும் பொருளாதாரத் தடை என்ற ஆயுதத்தைத் தடுக்கும் கவசமாக மாறியது. வெனிசுலாவுக்கான நன்மையாக மட்டுமல்லாமல், ஏழ்மை நிலையில் உள்ள இதர லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் மலிவு விலையில் கச்சா எண்ணை தரப்படுகிறது. இது அந்த அண்டை நாடுகளில் ஏற்படும் வளர்ச்சி வெனிசுலாவுக்கும் நன்மையளிப்பதாக முடிந்தது.

உணவு உற்பத்தி, விநியோகம் இவற்றில் தன்னிறைவு காண்பதற்கு முதன்மை முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. குறிப்பாக பால், இறைச்சி வகைகள், காய்கறிகள் ஆகியவற்றில் கூடுதல் முனைப்பு செலுத்தப்பட்டது.

மற்றொரு முக்கியமான நடவடிக்கை, தொழில்நுட்ப வளர்ச்சியிலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுகளிலும் தாராளமாக முதலீடு செய்ய வழி வகுக்கப்பட்டது. அது வரையில் முதலாளிகள் இத்துறைகளில் முதலீடு செய்ய முன்வரவில்லை. இத்தகைய நடவடிக்கைகளின் மைய இலக்காக அன்று இருந்தது, இன்றும் இருப்பது வறுமை ஒழிப்பு. அதற்கு உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்ற தாரைவார்ப்புக் கொள்கைகள் உதவாது என்ற தெளிவோடு நீண்டகாலத் திட்டங்களும் இடைக்காலத் திட்டங்களும் வகுக்கப்பட்டு, முறையாகச் செயல்படுத்தப்பட்டன.

இத்துடன் இணைந்ததாக ஏழைகளுக்கான மருத்துவ சேவை இலக்கு வைத்து மேம்படுத்தப்பட்டது. 1998ல் அரசு மருத்துவமனைகளில் இருந்த மருத்துவர்கள் எண்ணிக்கை 1,628. 2007ல் இந்த எண்ணிக்கை 19,571 ஆக உயர்ந்தது என்றால் எந்த அளவுக்கு அக்கறையோடு இது அணுகப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம். குடிமக்களில் பாதிப்பேருக்கு மாநியவிலையில் உணவுப் பொருள்கள் கிடைக்கச் செய்யப்பட்டது. தனி மனிதருக்கான சமூகச் செலவு 300 சதவீதம் அதிகரித்தது.

ஆய்வுத் தகவல் ஆதாரம்

இந்த விவரங்களைத் தருவது வெனிசுலா அரசோ, அதன் ஊடகங்களோ அல்ல. குளோபல்ரிசர்ச் என்ற உலகளாவிய ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள தகவல்களே இவை. அந்த அறிக்கையின்படி, இத்தகைய ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் பலனாக, 2003ம் ஆண்டில் 54 சதவீதமாக இருந்த வெனிசுலா வறுமை நிலைமை, 2007ம் ஆண்டில் 27 சதவீதமாகக் குறைந்தது. அதீதமான வறுமை 1996ம் ஆண்டில் 43 சதவீதமாக இருந்தது, 2007ல் அது வெறும் 9 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. வெனிசுலா உழைப்பாளிகளிடையே 1998ம் ஆண்டில் 17 சதவீதமாக இருந்த வேலையின்மை 2007ம் ஆண்டில் 7 சதவீதமாகச் சரிவடைந்தது. வேலைவாய்ப்பு வளர்ச்சி அமெரிக்காவை விட 3 மடங்கு அதிகம் என்று அமெரிக்க வல்லுநர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கும் அங்கே பெட்ரோல் விலை குறைவாக இருப்பதற்கும் என்ன தொடர்பு? எண்ணை என்று மட்டும் எடுத்துக்கொண்டால் அரசுக்கு நிச்சயம் இழப்புதானே? இக்கேள்விகள் எழுவது இயல்பு. இந்த ஒருங்கிணைந்த கொள்கை விதைப்புகள், நடவடிக்கைப் பயிர் வளர்ப்புகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விளைச்சலாக, வெனிசுலா அரசுக் கருவூலத்திற்கு நிதி வந்து பாய்வது உறுதியானது.

இருவேறு பார்வை

ஒரு நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த விளைவாக்குவது சோசலிச நடவடிக்கைகளின் ஒரு அடிப்படை. ஒவ்வொரு துறைக்குமான வரவு செலவு, அதிலே ஏற்பட்ட லாப நட்டம் என்று பார்ப்பது முதலாளித்துவக் கணக்கு. அவ்வகையில், வெனிசுலா அரசின் கருவூலத்திற்குத் தடையில்லா நிதி வருவாய் உறுதிப்பட்டதன் சமூகப் பயன்பாடுதான் உலகிலேயே மிகமிகக் குறைவான விலையில் பெட்ரோல்-டீசல் விநியோகம். இதனால் மக்களின் நடமாட்டமும், தொழிலகங்களின் இயக்கமும் முட்டுக்கட்டையின்றித் தொடர்வது உறுதிப்பட்டது. இது நாட்டின் பிற துறைகளின் வளர்ச்சிக்கும் இட்டுச்சென்றது.

சாவேஸ் ஆட்சிக்கு வந்தது ராணுவக் கிளர்ச்சியாலோ, வன்முறை வழிகளாலோ அல்ல. ராணுவ பலத்தோடும், ஒடுக்குமுறை உத்திகளோடும் இருந்த வெனிசுலா ஆட்சியாளர்களை ஜனநாயக வழியில் எதிர்கொண்டு, மக்கள் ஆதரவோடு தேர்தலில் வெற்றி பெற்றே அவர் ஆட்சியமைத்தார். அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரரும் அல்ல. ஆனால், தெளிவான இடதுசாரிக் கண்ணோட்டத்துடன் வெனிசுலா சோசலிசக் கட்சியையும் அதன் ஆட்சியையும் வழிநடத்தினார் அவர். அடுத்தடுத்த தேர்தல்களில் அவரையும் அவரது கட்சியையும் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று முயன்ற எதிர்க்கட்சிகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள், குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள், இன்னும் குறிப்பாக அமெரிக்க எண்ணை நிறுவனங்கள் தாராள நிதியுதவி அளித்தது தற்செயலானது அல்ல. அமெரிக்க அரசும், வெனிசுலாவில் ஜனநாயகம் இல்லை, மக்கள் வாழ்க்கை முன்னேறவில்லை என்று உலகத்தை நம்பவைப்பதற்காக டாலர்களைக் கொட்டியது. வெனிசுலா மக்கள் அந்தப் போலிப்பரப்புரைகளைப் புறந்தள்ளி தொடர்ச்சியாக நான்கு முறை சாவேஸைத்தான் தங்கள் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அவருக்குப் பின் மதுரோவைத் தேர்ந்தெடுத்தார்கள்.

வெனிசுலாவில் அரசு மேற்கொள்ளும் இத்தகைய சமூக நலம் சார்ந்த நடவடிக்கைகள் ஆட்சியதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக மக்களைக் கவர்வதற்கான திட்டங்கள் அல்ல. மாறாக, இத்தகைய சமூக நலம் சார்ந்த நடவடிக்கைகளைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அந்நாட்டு மக்கள்தான் ஆட்சியதிகாரத்தை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்கிறார்கள்.

சோசலிசம் என்ற சொல்லையே இந்திய அரசமைப்பு சாசனத்திலிருந்து அகற்றிவிடத் துடிக்கிறவர்களால் இதையெல்லாம் ஏற்க முடியாதுதான். இந்தியா எதிர்கொண்டிருக்கும் இன்றைய பெட்ரோல்-டீசல்-எரிவாயு சிக்கலுக்குத் தீர்வு, உலகச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அனுசரித்துக்கொள்ளும் விலைக்கொள்கை அல்ல. இது மக்களுக்குக் கிடைத்தாக வேண்டிய அடிப்படைச் சேவை என்ற உணர்வோடு, மறுபடியும் பெட்ரோலிய விலைக்கட்டுப்பாட்டை அரசு எடுத்துக்கொள்வதுதான். மாநில அரசுகள் தங்களுடைய வரிகளைக் குறைத்துக்கொள்ளலாமே என்று சிலர் கூறுகிறார்கள். சில மாநில அரசுகள் அத்தகைய நடவடிக்கைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், மாநிலங்கள் மீது சுமையேற்றுகிற, மத்திய அரசு தனது கைகளை உருவிக்கொள்கிற இந்த வழியும் ஏற்கத்தக்கதல்ல. நேரடியாக எண்ணைத் துறைக்கு லாபமா நட்டமா என்று ஒரு வியாபாரி போலப் பார்க்காமல், ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்திற்கு நன்மை என்று பொறுப்பாளராகப் பார்க்கிற கொள்கை வேண்டும். அதற்காக, இன்று மத்திய அரசு வசூலிக்கிற வரிகளைக் கைவிட்டாலே பெட்ரோல்-டீசல் விலை கீழே இறங்கிவிடும். பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் சந்தை வேட்டையிலிருந்து எண்ணைத்துறையை மீட்டு, பொதுத்துறையின் முழுப் பொறுப்பில் ஒப்படைப்பதே மக்களின் வாகனங்கள், தொழிலக எந்திரங்கள், விவசாய நீரேற்று விசைகள் உள்ளிட்டவற்றின் எரிபொருள் தொட்டிகளில் பெட்ரோலும் டீசலும் வறண்டுபோகாமல் இருப்பதற்கான நம்பகமான வழி.