டெல்லி: இந்தியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரமாக பயன்பாட்டுக்காக முதன்முதலாக அனுமதிகோரி தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை ஃபைசர் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளன. இந்தியாவில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், ஆகஸ்போர்டு, சீரம் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதற்கிடையில், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஜேர்மனியின் பயோஎன்டெக் உடன் உருவாக்கியுள்ள ஃபைசர்  நிறுவன தடுப்பூசியை இந்தியாவில்  அவகால பயன்பாட்டுக்கு அனுமதி கோரி முதன்முதலாக கடந்த ஆண்டு இறுதியில் விண்ணப்பித்திருந்தது.

ஆனால், ஃபைசர் நிறுவன   தடுப்பூசி இந்தியாவுக்கு தேவையில்லை. ஃபைசருக்கு உரிமம் கூட வழங்கப்படாது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும்,  அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் தடுப்பூசி தேவைகளை ஃபைசர் பூர்த்தி செய்ய வேண்டும். இப்போது இந்தியாவில் 3 தடுப்பூசிகள் சோதனை கட்டத்தில் இருப்பதாகவும், அவை இந்தியாவுக்கு போதுமானது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஃபைசர் தடுப்பூசி  மருந்து தயாரிப்பாளரான யு.எஸ். நிறுவனம் புதன்கிழமை இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டாளருடன் ஒரு சந்திப்பை நடத்தியது,  அதைத்தொடர்ந்து தனது விண்ணப்பத்தை வாபஸ் பெறுவதாகஅறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர்களுடன் நடத்திய ஆலோசனையில், தேவைப்படக்கூடிய கூடுதல் தகவல்களைப் பற்றிய எங்கள் புரிதலின் அடிப்படையில், இந்த நேரத்தில் அதன் விண்ணப்பத்தை திரும்பப் பெற நிறுவனம் முடிவு செய்துள்ளது, என்று தெரிவித்துள்ளது.