புதுடெல்லி: கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஊசி மருந்தான ரெம்டிசிவர் விலையை, மத்திய அரசின் தலையீடு காரணமாக குறைத்துள்ளன மருந்து நிறுவனங்கள் என்று கூறியுள்ளது தேசிய மருந்துகள் விலை ஆணையம்(என்பிபிஏ).

கடிலா ஹெல்த்கேர், டாக்டர்.ரெட்டியின் ஆய்வகங்கள் உள்ளிட்ட மருந்து நிறுவனங்கள், ரெம்டிசிவர் ஊசிமருந்தின்(100 மிகி) விலையை குறைத்துள்ளன.

இந்த விலை குறைப்பு தொடர்பாக பேசியுள்ள மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் மன்சுக் எல் மண்டாவியா, “கொரோனாவுக்கு எதிரான அரசின் யுத்தத்தில், கைகோர்த்துள்ள மருந்து நிறுவனங்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுள்ளார்.

மருந்து நிறுவனங்களின் இந்த முடிவை, மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவும் வரவேற்றுள்ளார்.

விலை குறைப்பு தொடர்பாக வெளியான தகவல்களின்படி, பல்வேறு மருந்து நிறுவனங்கள், 100 மிகி. ரெம்டிசிவர் ஊசி மருந்தின் விலையை மிக கணிசமாக குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.