போலியோ தடுப்பு மருந்தில் கலப்படம் : தயாரிப்பு நிர்வாகி கைது

டில்லி

குழந்தைகளுக்கு தரப்படும் போலியோ தடுப்பு மருந்தில் கலப்படம் இருந்ததால் அந்த நிறுவன நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்..

இந்தியாவில் போலியோ நோய் முழுவதுமாக நீங்கி விட்டதாக கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.   குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளித்ததால் தான் இது முடிந்தது என அரசும் நிறுவனமும் தெரிவித்தன.   இந்த தடுப்பு மருந்து வழங்கும் முகாம்கள் இன்னும் தொடர்ந்து வருகின்றன,

இந்நிலையில் இந்த போலியோ தடுப்பு சொட்டு மருந்துகளில் கலபடம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   அதை ஒட்டி நடந்த சோதனையில் மொத்தம் உள்ள மருந்து புட்டிகளில் சுமார் 50000 லிருந்து 150000 வரையிலான மருந்துகள் வரை கலப்படம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த மருந்துகள் காசியாபாத்தில் உள்ள ஒரு மருந்து தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதாகும்.   இங்கு தயாரிக்கப்பட்ட மருந்துகள் உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு தரப்பட்டுள்ளன.   இதனால் இந்த குழந்தைகள் உடல்நிலை சீர் கெடலாம் எனும் சந்தேகம் இந்த பகுதி மக்களிடையே எழுந்துள்ளன.

இது தொடர்பாக இந்த மருந்துக் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் கடந்த மாதம் 27 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.    மற்ற இயக்குனர்களும் நிர்வாக இயக்குனரின் குடும்பத்தினரும் தலைமறைவாகி உள்ளனர்.    அத்துடன் இந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து மருந்துகளும் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.