ஆன்லைன் மருந்து வர்த்தகத்துக்கு எதிர்ப்பு: இன்று நாடு முழுவதும் ‘மெடிக்கல் ஷாப்’ மூடல்

சென்னை:

ன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் மருந்து கடைகளை மூடி போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில், தமிழக மருந்துகடைகளும்  பங்குபெற்றுள்ளது.

ஆன்-லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க மத்திய அரசு கடந்த மாதம் வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு மருந்து வணிகர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆன்-லைன் மருந்து விற்பனை பொதுமக்களுக்கு ஆரோக்கியமற்றது என்றும் டாக்டரின் பரிந்துரையில் மட்டுமே விற்க வேண்டும் என்று மருந்து கடை வணிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.   மேலும் தடை செய்யப்பட்ட மருந்துகளை சிறுவர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் வாங்குவதற்கும் ஆன்லைன் வழி வகுக்கும் என்றும் மருந்தக உரிமையாளர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

மருந்து கடை தொழிலையே நம்பி  நாடு முழுவதும்  8 லட்சம் பேர் நேரடியாகவும், 40 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும், அவர்களுடைய குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ள மருந்து வணிகர்கள் ஆன்லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கனவே றிவித்தபடி  நேற்று நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை 24 மணி நேர கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.