5-ம் கட்ட தளர்வு: இன்றுமுதல் நாடு முழுவதும் பள்ளிகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பு!

டெல்லி : மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்துள்ள 5வது கட்ட தளர்வுகளின்படி,  இன்றுமுதல் நாடு முழுவதும் பள்ளிகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில், பள்ளிகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள்  திறக்க  மாநில அரசு அனுமதிக்காததால், இங்கு தொடர்ந்து பொதுமுடக்கம் அமலில் இருக்கும்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி  அன்று மத்தியஅரசு முதல் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பல கட்டங்களாக ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. 9வது கட்ட ஊடங்காக அக்டோபர் 31ந்தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில்,  பல்வேறு கட்ட தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து,  5ம் கட்ட தளர்வுகளின் படி, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியில் உள்ள பள்ளிகள், திரையரங்குகள், மல்ட்டிபிளெக்சுகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் ஆகியவை அக்டோபர் 15ந்தேதி முதல் திறக்கலாம் என்றும், இது தொடர்பாக மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்ததுடன்,  முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்பட வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்தியஅரசின் தளர்வுகளைத் தொடர்ந்து, தமிழகம்,  டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் பள்ளிகளை தற்போது திறப்பதில்லை என முடிவு செய்துள்ளன. ஆனால், சில மாநிலங்கள் குறிப்பாக பஞ்சாப், உ.பி. போன்றவை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்து உள்ளது.

திரையரங்குகளைப் பொருத்தவரை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் 50 சதவீத டிக்கெட்களை மட்டுமே விற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிக்கெட்களை முடிந்தவரை இணைய வழியில் வழங்க வேண்டும், போதுமான டிக்கெட் கவுன்ட்டர்களை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி புதுச்சேரி, டெல்லி உள்பட பல மாநிலங்களில் திரையரங்குகள் இன்று திறக்கப்பட உள்ளன. ஆனால், தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

பொழுதுபோக்கு பூங்காக்களில் அடிக்கடி மக்களால் தொடக்கூடிய பகுதிகளை கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக போதுமான பாதுகாவலர்களை பணியில் அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறிய அளவிலான பொழுதுபோக்கு பூங்காக்கள் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டன.