சென்னை:

ள்ளி விடும்போது, உடற்கல்வி ஆசிரியர் பள்ளி அருகே ஏற்படும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி மாணவ மாணவிகளை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வரும் தமிழக அரசு பள்ளி முடிந்து மாணவ மாணவிகள் வெளியேறும்போது,  ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் வகையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்து உள்ளது.

அதன்படி,  வகுப்புகள் முடிந்து மாணவர்கள் வெளியே அனுப்பும் போது ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் அனுப்ப வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்றும், பள்ளிக்கு, இருசக்கர வாகனத்தை ஓட்டி வரும் மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் கண்டிப்புடன் கூறி உள்ளது.

பள்ளிகளுக்கு இருசக்கர வாகனத்தில் வரும்போது ஆசிரியர்கள் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், பள்ளிகளில் காலையில் நடைபெறும் இறைவணக்கக் கூட்டத்தில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், வகுப்புகள் முடிந்து மாணவர்கள் கூட்டமாக வெளியே வந்து பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதால், அதிகளவு உயிரிழப்பு ஏற்படுவதாகவும், அதனைத் தவிர்க்க , ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் மாணவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் உடற்பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்கள் பேருந்து ஏறும் பேருந்து நிலையத்தில் நின்று, ஒரு மணி நேரம் மாணவர்களை நெறிமுறைப்படுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது