பிச்சேஸ்வரன்

சிறுகதை

பா. தேவிமயில் குமார்

 

“ரோஜா, இன்னிக்கு எனக்கு ஆபிஸ்ல வேலை அதிகமா இருக்கும், அதனால என்னைய எதிர்பார்க்க வேணாம், சாப்ட்டு தூங்கிடுங்க, வரேன்,” எனக் காலையிலே கிளம்பிவிட்டான் குலோத்துங்கன்.

“சரிங்க,” என அவனை வழியனுப்ப வரும் போது வாசலில் ஒரே சத்தம், அங்கு காலையில் ஏழு மணிக்கு பொறியியல் கல்லூரி மாணவிகள் பேருந்துக்காக நிற்கும் இடத்திலிருந்துதான் அந்த சத்தம்.

என்ன என்று தம்பதியர் சென்று பார்க்கும் போது, அந்த மாணவிகள், பைக்கில் பறந்து சென்ற இரண்டு “ரோடு ரோமியோ” க்களை  திட்டிக்கொண்டு  இருந்தனர், பின் அருகில் அமர்ந்திருந்த பிச்சைக்காரனைப் பார்த்து “தேங்ஸ் அண்ணா” என சொன்னார்கள், அவன் அதனைக் காதில் வாங்காமல் தன்  இருப்பிடமான மரத்தடிக்குச் சென்று உட்க்கார்ந்து விட்டான்.

“என்னம்மா நடந்தது” என குலோத்துங்கனும் ரோஜாவும் கேட்டனர்,

“பஸ்ஸிற்காக நின்னுக்கிட்டு இருந்தப்ப இந்தப் பொறுக்கிப் பசங்க பக்கத்துல வந்து அசிங்கமாப் பேசிட்டு, சைகை காமிச்சாங்க அப்ப  நாங்க திட்டியும் அடங்கல, திரும்பத் திரும்ப இங்கயே ரவுண்டு அடிச்சானுங்க, அப்பதான் இந்த பிச்சைக்கார அண்ணன் அங்கிருந்து வந்துக் கல்லைத்தூக்கி அவனுங்க மேல போட்டாரு, அப்புறம் ஓடிட்டானுங்க” என்றனர்.

“சரிம்மா, நீங்க ஒரு பத்து பேரு இருப்பீங்க இல்லையா ? இதுக்கு மேல ஜாக்கிரதையா இருங்க, கையில் “பெப்பர் ஸ்பிரே” “மிளகாய்ப் பொடி” எல்லாம் வச்சுக்கோங்க, கவலைப்படாதீங்க எல்லாம் எங்க வீட்டுக் கேமராவுலப் பதிவாகியிருக்கும் பார்த்துக்கலாம்” என்றான் குலோத்துங்கன்.

“அண்ணா நீங்க உங்க டி.வி. சேனல்ல இந்தப் பிரச்சினையைப் பத்திப் போடுங்கண்ணா” என மாணவி ஒருத்திக்கேட்டாள்.

“சரிம்மா, உடனே இது பத்தி எங்க டீம்ல இருக்கறவங்களோட பேசறேன்” என்றான். சென்னை பெருநகரமாக இருந்தாலும் இதுபோன்ற காட்சிகளையும் நிறையக் காணலாம்.

உன்மையில் அவனுக்கு வாயிலிருந்து வார்த்தைகள் வந்ததேத்தவிர, பார்வையெல்லாம்  பிச்சைக்காரன் மீதுதான் இருந்தது யாரிடமும் வந்து பிச்சையெடுக்க மாட்டான், அழுக்கேறிப் போன சட்டை, பேண்ட், மரத்தடியில் குப்பைத்தொட்டிக்கு அருகே தங்குகிறான், யாரும் எதுவும், தரவில்லையென்றால் குப்பையில் தேடி, உணவுப்பொருள் இருந்தால் சாப்பிடுவான், அதுவும் இல்லையென்றால் முன்புறமுள்ளக்கடையில், கெட்டுப்போன பழங்களை ஒருத்தொட்டியில் மாட்டிற்காகக் கொட்டி வைப்பார்கள் அதனை எடுத்து உண்பான், ஒரு வருடத்திற்கு மேலாக இங்குதான் இருக்கிறான், இன்று இந்தப் பெண்களுக்கு உதவியிருக்கிறான்  என நினைத்தபடி, அவனைப் பார்த்தபடியே  தான் வேலை செய்யும் அலுவலகம் நோக்கி இரு சக்கர வாகனத்தினை செலுத்தினான்.

குலோத்துங்கன் ஒரு பிரபலமான தனியார் தொலைக்காட்சி  நிறுவனத்தில் நிருபராக இருக்கிறான் அதிலும் அரசியல் வாதிகள், பெரும்புள்ளிகளை ரகசியமாய்க் கண்காணித்து ரகசிய செய்திகள் வெளியிடும் பிரிவில் முக்கியப்  பொறுப்பில் உள்ளான்.

சில சமயங்களில் இதற்காக அவன்மீது கடுமையானத் தாக்குதல் கூட, நடந்துள்ளது, ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்து அதே அலுவலகத்தில் நிர்வாக இடத்திற்கு வர வேண்டுமெனக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறான்.

அடடா, பல முக்கியப்புள்ளிகளின் நடவடிக்கையை பதிவு செய்கிறோம், இந்தப் பிச்சைக்காரனின் நடவடிக்கையைப் பதிவு செய்யவில்லையே என நினைத்த போது, சரி, கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருக்கும், அதனை எடுத்துப்  பார்ப்போம் என நினைத்துக் கொண்டே அலுவலக வேலைகளைப் பார்த்தான்.

அந்த சமயம் பார்த்து மார்ச் மாதம் 2020 ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது வெளியில் ஆள் நடமாட்டம் குறைந்திருந்தது. பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி உண்டு என்பதால் அவன் தினமும் வெளியில் செல்லும் போதும், வரும் போதும் அவனைப் பார்த்துக் கொண்டே சென்றான், பின் தன் வீட்டில் இருக்கும் பழம், உணவுப் பொருளை அவனிடம் வைத்து விட்டுச் செல்வான், வரும்போது கொடுத்த பிளாஸ்டிக் டப்பா, கவர் எதுவுமே இருக்காது, இடம் துடைத்து வைத்ததைப் போல இருக்கும்.  ஊரடங்கால் உணவு கிடைக்காததால் தெரு நாய்கள், பூனைகள், காகம், குருவிகள் எல்லாம் அவனைச் சுற்றி, சுற்றி வந்தன, அவன் தனக்குக் கிடைக்கும் உணவில் அவைகளுக்கும் பங்கிட்டான் என்பதைத்தன் வீட்டுக் கண்காணிப்புக் கேமிராவில் பார்த்து அதிசயித்தான்.

 

கொரோனாவிற்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி வெகு  வேகமாக நடைபெற்று வந்தது. அவ்வாறு வருபவர்களை குலோத்துங்கன் பேட்டி எடுத்து தன்னுடையத்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வந்தான்.

ஒருமுறை அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழு ஒன்று வீடு வீடாக சேகரித்த பணம் ரூபாய் ஒரு லட்சத்தினை  வழங்க வந்தார்கள், அப்போது அவன் அதனை தன்  வீட்டு வாசலில் வாங்கிக்  கொண்டு, அவர்களிடம் பேட்டி எடுத்தான், அந்த இளைஞர்கள் தங்கள் குழுவின் பெயர், தெரு என தங்கள் முகம் தெரியும் படி குலோத்துங்கனிடம் பேட்டிக்  கொடுத்துக் கொண்டிருந்தனர்.

காலை நேரம் என்பதால் சத்தமில்லாமல், சரியான வெயிலும் இருந்ததால் அந்தப்பேட்டி மிகவும் அழகாக வந்துள்ளதென நினைத்து எடுத்தப் பேட்டியை அந்த இளைஞர்களிடம் காண்பித்துக் கொண்டு இருந்தான்.

“சரிங்கண்ணா ! நம்ப ஏரியா மேட்டரு அதனால கொஞ்சம் நல்லா “ரிலே” பண்ணுங்க அண்ணா” என்று ஒருவன் சொன்னான்.

“நம்ப எல்லாத் தெருவும் டி.வி.ல  காமிங்கண்ணா” என்றான் இன்னொரு இளைஞன்.

“சரிப்பாப் பண்ணலாம்,” என சொல்லும் போதே ஏதோ பின்புறமிருந்து சிறு நாற்றம் அடிப்பதை அனைவரும் உணர்ந்தார்கள்.

“என்ன ? ஏதோ…. நாறுது,” என்றான் ஒருவன்.

ஆமாம் என்றபடி திரும்பியபோது அந்தப் பிச்சைக்காரன் இவர்கள் பின்னே நின்றிருந்தான்.

“டேய், இங்கென்னடா உனக்கு வேலை ? நாறுதுப் போடா, அந்தப்பக்கம்” என்றான் ஒரு இளைஞன், குமட்டலுடன்.

ஆனால் குலோத்துங்கன் மட்டும், “இருங்கப்பா, அவர் எதற்கு வந்திருக்கார் ?” என்று கேளுங்கப்பா, என்றபடியே தன் கேமராவை ஒரு இளைஞரிடம் கொடுத்து நடப்பதை எடுக்கச் சொன்னான் சைகையால்.

எதுக்கு இங்க வந்தீங்க என்றுக் கைகளால் சைகை செய்து காண்பித்தான் குலோத்துங்கன், உடன், அந்தப் பிச்சைக்காரன், கீழே அமர்ந்து தன் சட்டையுள்க் கைவிட்டு ஒரு நெகிழிப்பையில் வைத்திருந்த 10 ரூபாய், 20, 50 எனப்பல ரூபாய் நோட்டுக்களைக் கொட்டினான், அதைப் பார்த்த அனைவருக்கும் மயக்கம் வராதக் குறைதான், இப்போது அந்த நாற்றத்தை அவர்கள்ப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பின் தன்னுடையக் கையில் வைத்திருந்த அழுக்கு மூட்டையைப் பிரித்தான் இரண்டு மூன்று கிலோவுக்கு மேல் வெறும் நாணயங்கள், திகைத்து விட்டனர், அனைவரும்.

இதையெல்லாம் செய்து விட்டு எதுமே நடக்காததுப் போல போய் தன் இருப்பிடத்தில் அமர்ந்து விட்டான் அந்தப் பிச்சைக்காரன்.

 

அந்த இளைஞர்கள், குலோத்துங்கன், அவன் மனைவி ரோஜா, அவர்களின் குழந்தைகள் என அவன் கொடுத்துச் சென்றப் பணத்தினை வாசலிலேயே எண்ணிக் கொண்டு இருந்தார்கள், அதிசயத்துடன் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் வந்தது அந்த நகர் முழுவதும் மக்களிடம் சேமித்தும், இந்த ஒருப் பிச்சைக்காரன் கொடுத்த பணமும் ஏறத்தாழ சமமாக இருந்தது.

பிச்சைக்காரன் மீது நாற்றம் அடித்ததுதான் ஆனால் அவன் கொடுத்த காசு நாற்றம் அடிக்கவில்லை என்பது போல இருந்தது நடந்த நிகழ்ச்சி.

அன்று இரவே அவன் வேலை செய்யும் தொலைக்காட்சியில் அந்த இளைஞர்கள் வந்து கொடுத்த நிதி அதைத் தொடர்ந்து பிச்சைக்காரன் கொடுத்த நிதி மற்றும் கல்லூரி மாணவிகளை ஈவ் டீசிங்  பிரச்சினையில் காப்பாற்றியது என ஒளிபரப்பியதில், அன்று  அந்த தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறியது. அது மட்டுமல்ல, வாட்ஸ் அப், பேஸ்புக் என பிரபலமானது இந்த படம்.

தொலைக்காட்சியின் உரிமையாளர் குலோத்துங்கனை அழைத்து “நீ எத்தனையோ சாகசங்கள் நம் சேனலுக்காக  செய்துள்ளாய், ஆனால் இது போன்ற ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சியை இப்போது தான் செய்துள்ளாய், அடுத்த வாரத்தில் இருந்து நீயும் நிர்வாகக் குழுவில் சேர்க்கப்படுவாய், வாழ்த்துக்கள்” என்றார்.

பின் அந்தப் பிச்சைக்காரன் அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமாகிவிட்டான். காலை, உணவே ஒரு நான்கு பாக்கெட் மதியம், இரவு என அவனிடம் சாப்பாடுத், தண்ணீர் எனக் குவிகிறது, அதையும் அவன் தனக்குப்போக மீதியை இரண்டு  தெருக்கள் தள்ளியிருக்கும் பிச்சைக்காரர்களிடம் சேர்த்து விடுகிறான். வழக்கம் போல நாய், பூனைக்கும் காக்கை, குருவிகளுக்கும் உணவளித்து பார்த்துக் கொள்கிறான்.

“ரோஜா, எத்தனையோ அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், தொழிலதிபர்களைக் கண்காணித்து செய்தி வெளியிட்டிருக்கிறேன், ஆனால் வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு “மனிதனை” ப்பற்றிய செய்தியை வெளியிட்டது மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றான்.

மேலும், “டி.வி. யில் முகம் தெரிவதற்காக எவ்வளவோப்பேர் ஒப்பனைப் போட்டு வருவார்கள், ஆனால் அவர்களை விட இவன் மனதால் அழகானவன்” என்றான்.

“ஆமாங்க தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாத ஒரு துறவியைப்போன்ற மனது அவனுக்கு” என்றாள் ரோஜா,

“இனி அவன் பசியாக இருக்கக்கூடாது அவனை நாம் பார்த்துக்கொள்வோம்” என்றான்.

“ரோஜா, நேற்று ஒரு தொண்டு நிறுவனம் அவனை அழைத்துச்சென்று குளிக்கவைத்து, தலைமுடி வெட்டி இல்லத்தில் தங்க வைத்தார்கள், ஆனால் இன்று அவன் மீண்டும் தன்  பழைய இடத்துக்கே வந்து விட்டான்,” என்றான் குலோத்துங்கன்.

“ஏங்க நாம அவனைப் பிச்சைக்காரன் என்கிறோம், அவன் உணவுக்குப் பிச்சையெடுக்கிறான், நாம் பதவி, வாழ்க்கை, பட்டம், வசதி எனப்பல விசயங்களுக்குப் பிச்சையெடுக்கிறோம், இந்த உலகில் பிச்சையெடுக்காத மனிதன் என்பவன் யாருமேயில்லைங்க,” என ரோஜா குலோத்துங்கனிடம் சிரித்துக் கொண்டேக் கூறினாள்.

“அதனால இனி அவன் பெயர், பிச்சைக்காரன் இல்லைங்க பிச்சேஸ்வரன் சரியாங்க  ?” என்றாள் ரோஜா.

“ஆமாம் அவன் மற்ற மனிதர்களை விட உயர்ந்தவன்தான், ரோஜா, நீ சொல்வது சரிதான்,” என வாசலில் நின்றுகொண்டு அவனைப் பற்றியே இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அந்த நகர் மக்கள், அடுத்து அவன் என்ன செய்வான் என யோசித்தபடியும், உணவளித்தபடியும் இருந்தார்கள், இப்போதெல்லாம் அவனை அனைவரும் அண்ணா, தம்பி, ஐயா என அழைக்கிறார்கள், அப்போதும் அவன் சலனமில்லாமல் தான் அமர்ந்திருக்கிறான் ஒரு ஞானியைப் போல

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்

குறள்  : 22:07

பொருள்

தனது செல்வம் சுருங்கிய காலத்திலும் பிறர்க்கு உதவி செய்யும் பண்புடையார் தமது ஈகைக் குணத்தை விடார். தமது இடம், பொருள், ஏவல் ஆகிய எல்லாமே குறைந்து போனாலும் தமது இயல்பான ஒப்புரவு செய்யும் கடமையிலிருந்து விலக மாட்டார்கள்.