பெங்களுரூ:
ர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது. 1100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் மருத்துவர்கள் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கல்புர்கி மாவட்டத்தில் இதுவரை 943 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் , கல்புர்கியில் உள்ள அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அம்மருத்துவமனை கரோனா வார்டில் பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரிவது வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சிகளும், நோயாளிகளின் குடும்பத்தினரும் இதனை கடுமையாக விமர்சனம் செய்தனர். இது தொடர்பாக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமலு கூறும்போது, “இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்” என்றார்.

இதையடுத்து கல்புர்கி மாவட்ட ஆட்சியர் ஷரத் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவரது உத்தரவின் பேரில் பன்றிகளின் உரிமையாளர் மீது கல்புர்கி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.