சென்னை: பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2000ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் தகுந்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்படும் வரை தனியார் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதிப்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் தடைசெய்யுமாறு பொது நல வழக்கு மனு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஒன்பது மற்றும் ஆறாம் வகுப்புகளில் படிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயார் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஆன்லைன் வகுப்புகளின் போது ஒழுக்கக்கேடான, ஆபாச வலைத்தளங்களுக்கு மாணவர்கள் செல்லும் நிலைக்கு ​ஆளாகி வருவதாகவும், எனவே அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான உடனடி தேவை இருப்பதாகவும் மனுவில் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவரது வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், குடும்பத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் போது, ஸ்மார்ட்போன் அல்லது சில சந்தர்ப்பங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன் அல்லது கணினிகள் தேவைப்படுகின்றன. வலுவான இணைய இணைப்பு உள்ளவர்கள் மட்டுமே இந்த வகுப்புகளை அணுக முடியும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

மேலும், இதுபோன்ற ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர்கள் மாணவர்களை திறம்பட கண்காணிக்க முடியாது, இத்தகைய வகுப்புகள் சுயமாக ஊக்கமளிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே பொருத்தமானவை என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.