ஜெயிந்தியா, மேகாலயா

மேகாலயா மாநிலத்தில் சுரங்க வெள்ளத்தில் சிக்கிய 15 சிறுவர்களை காக்க உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா மாநிலத்தில் உள்ள ஜெயிந்தியா மலைப்பகுதியில் கிழக்குப் பகுதியில் ஒரு நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது.   இந்த சுரங்கத்தில் பணி புரிபவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் ஆவார்கள்.  இந்த சுரங்கம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே லைடீன் என்னும் நதி ஓடிக் கொண்டு இருக்கிறது.  இந்த சுரங்கங்களுக்கு மிகவும் குறுகிய நுழை வாயிலே உள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி லைடீன் நதியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.   அதனால் வெள்ள நீர் அருகில் இருந்த சுரங்கத்துக்குள் புகுந்துள்ளது.   முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்ட சுரங்கத்தில் அப்போது பணி புரிந்துக் கொண்டிருந்த 15 சிறுவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.    ஆயினும் வெள்ள நீரை வெளியேற்ற முடியாத நிலை உள்ளது.   விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த நீர்மூழ்கி வீரர்களும் சுரங்கம் முழுவதும் நீர் நிரம்பி உள்ளதால் மீட்புப் பணியை தொட்ர முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆதித்யா என் பிரசாத் என்பவர் ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.  அதில், “வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 15 சிறுவர்கள் வெகு நாட்களாக மீட்கப்படாமல் உளனர்.  அவர்களை உடனடியாக காப்பாற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவேண்டும்.

இதற்காக மேகாலய மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து அனைத்து துறையினரின் உதவியையும் நாட வேண்டும்.   ஏற்கனவே நாட்கள் பல கடந்து விட்டதால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.   தற்போதுள்ள நிலையில் வெள்ளம் வடிய இன்னும் ஒரு வாரம் ஆகும் என கூறப்படுகிறது.  அதனால் தாய்லாந்தில் செய்தது போல கிர்லோஸ்கர் நிறுவன ராட்சச பம்புகள் மூலம் உடனடியாக வெள்ள நீரை அகற்றவேண்டும்” என கோரிக்கை விடப்பட்டுள்ளது.