டில்லி

டந்து முடிந்த நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில்  பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 25 முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.   இதனால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.   போட்டித் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.    ஆயினும் ஒரு சில தேர்வுகள் மட்டும் நடந்தன.   அவ்வகையில் நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வு நடத்த கடும் எதிர்ப்பு எழுந்தது.

எதிர்க்கட்சிகள் மாணவர்கள் பெற்றோர்கள் என பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறிக் கடந்த ஞாயிறு அன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது.    இதில் போக்குவரத்து வசதிகள் இல்லாததாலும் கொரோனா அச்சுறுத்தலாலும் பல மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை உண்டானது.

இதையொட்டி பல மாணவர்களின் பெற்றோர்கள் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்காக மறு தேர்வு நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இந்த கோரிக்கையை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   அம்மனுவில் மறு தேர்வு நடத்த தேசிய தேர்வுகள் முகமைக்கு உத்தரவிடக் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.