சைவ உணவுக்காரர்களுக்கு ரெயிலில் தனி இடம் கோரி பொது நல வழக்கு

--

கமதாபாத்

சைவ உணவு உண்பவர்களுக்கு ரெயிலில் தனி இடம் அளிக்க கோரிக்கை விடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் பொது நல வழக்கு பதிந்துள்ளார்.

இந்திய ரெயில்வேயில் பல ரெயில்களில் பயணத்தின் போது உணவு வழங்கப்படுகிறது.   இந்த உணவு சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரு வகைகளிலும் வழங்கப்படுகிறது.   அவரவர் விருப்பத்துக்கு இணங்க இந்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.    தற்போது இந்த உணவு அடிப்படையில் ஒரு பொது நல வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது.

அகமதாபாத் நகரில் கான்பூர் என்னும் பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் ஈ ஈ சையத்.   சுமார் 67 வயதான இவர்  இந்த பொது நல வழக்கு மனுவை அளித்துள்ளார்.   சையத் தனது மனுவில், “ரெயிலில் சைவ மற்றும் அசைவ உணவுகள் அளிக்கப்படுகின்றன.   நான் சைவ உணவு உண்பவன்.   எனக்கு அருகில் யாரும் அசைவ உணவு உண்ணும் போது என்னால் உணவருந்த முடிவதில்லை.

அதே நிலை பலருக்கு உள்ளதை நான் அறிவேன்.    ரெயிலில் பயணம் செய்யும் சைவ உணவு சாப்பிடும்  பயணிகளுக்கு தனி இடமும்,  அசைவ உணவு சாப்பிடுவோருக்கு தனி இடமும் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.   ரெயிலில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் போதே சைவமா அல்லது அசைவமா என ஒரு விருப்பத்தை சேர்ப்பதன் மூலம் இவ்வாறு இடம் அளிப்பது சுலபமாக இருக்கும்.

இதனால் சைவ உணவு உண்பவர்கள் அருகில் மற்ற பயணிகள் அசைவ உணவு உண்பதையும் அதனால் சைவர்கள் சங்கடம் அடைவதையும் தவிர்க்க முடியும்.   இது முழுக்க முழுக்க உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் மட்டுமே கேட்கப்பட்டுள்ள கோரிக்கை ஆகும்.   இதில் அரசியலோ அல்லது சாதி மற்றும் மத பாகுபாடுகளோ இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.   அனேகமாக இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.