கோவாவிலிருந்து பூனே நகருக்கு கோலாப்பூர் வழியாக சென்ற ஹெலிகாப்டர் ஒன்றின் இஞ்சின் கோலாப்பூரில் பழுதடைந்ததாகவும் அந்த ஹெலிகாப்டரை ஓட்டிச்சென்ற விமானி இரு கார் மெக்கானிக்குகளை அழைத்து ஹெலிகாப்டரை பழுதுபார்த்து சரிசெய்ததாகவும் சிவில் ஏவியேஷன் துறைக்கு வந்த புகாரை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

heli2

கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஏ.டபிள்யூ 109 என்ற ஹெலிகாப்டரை அவினாஷ் போஸ்லே என்ற விமானி கோவாவிலிருந்து பூனேக்கு ஓட்டிச் சென்றிருக்கிறார். வழியில் கோலாப்பூரில் நிறுத்தப்பட்ட ஹெலிகாப்டர் திரும்ப செயல்படாத காரணத்தால் வேறு வழியின்றி அவர் இரு கார் மெக்கானிக்குகளை வரவழைத்து ஹெலிகாப்டரை பழுதுபார்த்து பின்னர் அதை சரிசெய்துவிட்டு பயணத்தை தொடர்ந்ததாக தெரிகிறது. ஆனால் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுது குறித்து அவர் தனது சிவில் ஏவிஏஷனுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தனது ரிப்போர்ட்டில் அவர் அதுகுறித்து எதுவும் குறிப்பிடவும் இல்லை.
எனவே சிவில் ஏவியேஷன் துறை அவினாஷ் போஸ்லேயை தீவிரமாக விசாரித்து வருகிறது. அவர் ஹெலிகாப்டரை இயக்குவதற்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரை சரிசெய்த கார் மெக்கானிக்குகள் யார்?
கோலாப்பூரைச் சேர்ந்த இம்தியாஸ் மொமின் மற்றும் அவரது சகோதரர் யூசுப் இருவருமே இந்த ஹெலிகாப்டரை சரிசெய்த கார் மெக்கானிக்குகள் என்று மகாராஷ்டிரா டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரும் கார்களை பழுது பார்ப்பதில் கில்லாடிகள் ஆவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் தண்ணீரில் ஓடும் காரை தயாரித்து பரபரப்பை ஏற்படுத்தினர் என்று தெரியவருகிறது.