கமலுக்கு மிரட்டல்: பினராய் விஜயன், சசிதரூர் கண்டனம்

திருவனந்தபுரம்:

இந்து தீவிரவாதம் இனியும் இல்லை என கூற முடியாது என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு பா.ஜனதா, சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கமல்ஹாசன் கருத்தை திரும்பப்பெற வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச போலீசார் கமல் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அகில இந்திய இந்து மகாசபா தலைவர் அசோக் சர்மா, கமல் போன்றவர்களை கையாளுவதற்கு வேறு வழியே இல்லை. அவர்களை தூக்கில் போட வேண்டும் அல்லது சுட்டுக்கொல்லவேண்டும் என காட்டமாக தெரிவித்தார்.

இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘‘இது போன்ற மத வெறியர்கள் மற்றும் பயங்கரவாத மனம் கொண்டவர்கள் கொலை மிரட்டல் விடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். கமலுக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கமல்ஹாசனின் பேச்சு உரிமையை பறித்து அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் இந்து மகாசபா தலைவர்களை நான் கடுமையாக கண்டிக்கிறேன். மகாத்மா காந்தி, கோவிந்த் பன்சாரே, தாபேல்கர், கல்புர்க்கி, கவுரிலங்கேஷ் ஆகியோருக்கு என்ன நடந்தது என ஒட்டுமொத்த தேசமும் அறியும். அந்த பட்டியலில் மேலும் சிலரின் பெயர்களை சேர்க்க முயற்சி நடக்கிறது. அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றார்.

இதேபோல், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறுகையில், ‘‘ கமலுக்க எதிராக வன்முறையை தூண்டி விடுபவர்களை கைது செய்ய வேண்டும்’’ என்றார்.

ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், அரவிந்த்சாமி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் தினேஷ் நேற்று ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.