தீபாவளிக்கு பட்டாசு போன்று கேரள மாநிலத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை யின் தனிச்சிறப்பே ‘’பூக்கோலம்’’ தான்.

மாவேலி மன்னனை மலர்களால் வரவேற்கும் ஓணம் பண்டிகையை கொண்டாட, கேரள மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ளது.

இந்த நிலையில் கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் , மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.

அப்போது பேசிய அவர்’’ கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதால், இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை வீடுகளுக்குள் தான் பொதுமக்கள் கொண்டாட வேண்டும். பொது வெளியில் ஓணம் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

‘’பூக்கோலம் போடுவதற்கு வெளி மாநிலங்களில் இருந்து மலர்களை தருவிக்க வேண்டாம். உங்கள் இல்லங்களில் அல்லது பக்கத்து வீடுகளில் மலரும் பூக்களை மட்டும் பூக்கோலம் போட பயன்படுத்திக் கொள்ளுங்கள்.’ என்றும் வேண்டுகோள் விடுத்துள்ள முதல்வர் விஜயன்’’ வெளியே இருந்து கொண்டுவரப்படும் பூக்களால் நமது மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது’’ என்று எச்சரித்தார்.

-பா.பாரதி.