அரிய இளஞ்சிவப்பு நிற வைரம் 50 மில்லியன் டாலருக்கு விற்பனை

ஜெனிவா:

ஜெனீவாவிலுள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்தில், ஏறக்குறைய 50 மில்லியன் டாலருக்கு (சுமார் 50.3 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்க்ஸ்) மிக அழகிய  இளஞ்சிவப்பு வைரம் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டது.

முன்னொரு காலத்தில் ஒப்பன் ஹெய்மர் (Oppen heimer) வைர குடும்பத்திற்கு சொந்தமாக இருந்த இவ்வைரம் உலகின் மிகசிறந்த வைரங்களில் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரிய பெரிய இளஞ்சிவப்பு வைரம் மிகவும் வேதியியல் தூய ரத்தினங்களுள் ஒன்றாகும் என கிறிஸ்டி நிறுவனம் கூறியது. இந்த வைரத்தை வாங்கியவர் புகழ்பெற்ற நகை வியாபாரி ஹாரி வின்ஸ்டன் என்பவர்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1920ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுரங்கத்தில் இந்த வைரக்கல் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக வைரங்கள் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஆனால் இந்த வைரம் அரிய இளஞ்சிவப்பு நிறத்தில் மின்னுவதே இதன் சிறப்பம்சமாகும்.

கிறிஸ்டியின் ஐரோப்பா கிளையின் தலைவரான பிரான்சுவா கியூரியல், இந்த வைரக்கல் வைரங்களின் லியோனார்டோ டா வின்சி என்று குறிப்பிட்டார்.