கடவுள் பக்தி உள்ளவர்கள் தவறு செய்யமாட்டார்கள்!: தமிழக ஆளுநர் பன்வாரிலால்

கடவுள் பக்தி உள்ளவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் பேசியிருக்கிறார்.

ஈரோடு மாவட்டம், கோபி வாய்க்கால் சாலையில் நிறுவப்பட்டுள்ள தியாகி ஜி.எஸ்.லட்சுமணன்  முழு உருவச் சிலையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று (புதன்கிழமை)  திறந்துவைத்துப் பேசியதாவது:

“சுமார் 650 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரராக விளங்கிய தியாகி ஜி.எஸ்.லட்சுமண அய்யர் மிகவும் எளிமையாக வாழ்ந்து மறைந்தார்.  சுதந்திரப் போராட்டத்தின்போது தனது மனைவியுடன் சிறைவாசத்தை அனுபவித்தார்.  வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும்  பங்கேற்று சிறை சென்றார்.

மகாத்மா காந்தியின் அறிவுரைப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கோபியில் ஹரிஜன விடுதியைத் துவக்கி, அவர்களுக்குத் தேவையான கல்வியையும் அளித்தார்.  கோபி நகராட்சியில் நகர்மன்றத் தலைவராக இருமுறை பணியாற்றியுள்ளார். இந்தியாவிலேயே கோபி நகராட்சியில் 60 ஆண்டுகளுக்கு முன்பே மனிதக் கழிவை மனிதனே அகற்றும் நிலையை ஒழித்து, இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். இவரது சிந்தனை தற்போது ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) போன்ற திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தினந்தோறும் இரவு படுக்கும்போதும், காலையில் எழும்போதும் கடவுளை நினைக்க வேண்டும். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடவுள் பக்தி உள்ளவர்கள் தவறு செய்யமாட்டார்கள்” என்று ஆளுநர் பன்வாரிலால் பேசினார்.

அடுத்து உரையாற்றிய கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

“தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதியைக் கட்டுவதற்கு ரூ. 10 லட்சம் நிதி விரைவில் பெற்றுத் தரப்படும். கோபி பிரதான சாலையில் அமைந்துள்ள கோபி வைர விழா மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், பள்ளி முன்பு தியாகி ஜி.எஸ்.லட்சுமண அய்யர் சிலை அமைப்பதற்கு இடம் ஒதுக்க முன்வந்தால் 3 மாத காலத்துக்குள் அந்த இடத்தில் அவருக்கு சிலை நிறுவப்படும்” என்றார்

இந்நிகழ்ச்சியில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், அகில இந்திய ஹரிஜன் சேவக் சங்கத் தலைவர் சங்கர்குமார் சன்யால், கோபி ஹரிஜன் சேவக் சங்கத் தலைவர் கே.எம்.வெங்கடேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டார்கள். . தமிழ்நாடு ஹரிஜன் சேவக் சங்கத் தலைவர் மாருதி வரவேற்றார். செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.