திருமலை:
திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு நடந்து செல்பவர்களின் வசதிக்காக மலைப்பாதை இன்று முதல் 12ந்தேதி வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம்  வரும் 3-ந் தேதி  ஆரம்பமாக  உள்ளது.  இதையொட்டி பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
111tirupathi
திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பில் 750 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
ஏழுமலையான தரிசிக்க நடந்து வரும் பக்தர்களின் வசதிக்காக   இன்று  முதல் வரும் 12-ந் தேதி வரை முதல், இரண்டாம் மலைப் பாதைகள்  இரண்டும் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையையொட்டி, வரும் 7,8-ந் தேதிகளில் இருசக்கர வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைப்பாதை மார்க்கங்களுக்கு செல்ல தேவஸ்தானம் சார்பில் இலவச பஸ்கள் இயக்கப்படும்.
பிரம்மோற்சவ சமயத்தில் சுமார் 7 லட்சம் லட்டுகள் இருப்பில் வைக்கப்படும். திருப்பதியில் சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
கருட சேவையின் போது மட்டும் கூடுதலாக 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன்படி, சுமார் 4,700 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். 2 ஆயிரம் தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஏதுவாக 4 இடங்களில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டு உள்ளது.
537 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. வெடி குண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக 22 ஆம்புலன்சுகள் மற்றும் 4 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படும்.
விழா தொடர்பாக, பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஆலோசனைகளை வழங்க 1800-425-111111 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.