பிரிட்ஜோ கொலை: 11 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்

ராமேஸ்வரம்,

மிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால்  சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

11 நாட்கள் இடைவெளிக்கு பிறகு இன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

ராமேஷ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த 22வயதேயான இளைஞர்  பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் கடந்த 6 ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.  அதன் காரணமாக, அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

பின்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீனவ பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பேசியதை தொடர்ந்து மீனவர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, பிரிட்ஜோவிடம் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மீனவர் சங்கப் பிரதிநிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று காலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.