மும்பை

புவி ஈர்ப்பு விசையக் கண்டுபிடித்தவர் ஐன்ஸ்டீன் எனத் தவறாகக் கூறியதற்கு பியூஷ் கோயல் சமாளிப்பு விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழிலக அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று ஒரு கூட்டத்தில், “உங்களுக்கு 5 டிரில்லியன் டாலர்  பொருளாதாரம் தேவை என்றால் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் கணக்குகளை நம்ப வேண்டாம்.  தற்போது நாடு 6- 7% பொருளாதார வளர்ச்சியில் உள்ளது.   அந்த வளர்ச்சி 12% ஆக விரைவில் மாறும்.

இந்த கணக்குகளைக் கவனத்தில் கொள்ள வேண்டாம்.  இந்த கணக்கு  எதுவும் ஐன்ஸ்டீனுக்குப் புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடிக்க உதவவில்லை.   அவர் ஏற்கனவே உள்ள தகவலை வைத்துத் தான் உருவாக்கிய சூத்திரம் மூலம் அதைக் கண்டறிந்தார்.  எனக்குத் தெரிந்து இந்த உலகில் எந்த ஒரு புதுக் கண்டுபிடிப்பும் நிகழவில்லை” எனக் கூறி உள்ளார்

ஐன்ஸ்டீன் பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்பே புவி ஈர்ப்பு விசையை ஐசக் நியூட்டன் கண்டு பிடித்துள்ளார்.   அமைச்சரின் இந்த தவறான  தகவல் நெட்டிசன்களுக்கு நகைச்சுவையை அளித்ததால் பலரும் கிண்டல் செய்துள்ளனர்.   குறிப்பாக ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் பியூஷ் கோயலை மிகவும் கிண்டல் செய்து டிவிட்டரில்  பதிந்துள்ளனர்.

இன்று மும்பை சத்திரபதி சிவாஜி டெர்மின்ஸ் ரெயில் நிலையத்தில் ராஜதானி எக்ஸ்பிரஸ் புதிய சேவையை அமைச்சர்  பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.  அப்போது அவர், “பொதுவாக எல்லோருமே தவறுகள் செய்வது வழக்கமாகும்.  நானும் அவ்வாறு தவறு செய்துள்ளேன்.  ஆனால் செய்த தவற்றை நான் மறைக்க மாட்டேன்.

நான் நியூட்டன் என்பதற்கு பதில் ஐன்ஸ்டீன் எனத் தவறாகக் குறிப்பிட்டுள்ளேன். .  அந்த தவற்றை நான் செய்தேன் என சொல்வதில் எனக்கு எவ்வித பயமும் இல்லை.   ஐன்ஸ்டீன் தவறுகள் செய்யாத மனிதனால் எந்த ஒரு புதிய விவரங்களையும் கண்டு பிடிக்க முடியாது எனக் கூறியதை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்” எனக் கூறி உள்ளார்.