கொல்கத்தா:

நகை வியாபாரியான சஞ்சய் குமார் கொல்கத்தா விமானநிலையத்தில் இருந்து ஐதராபாத்துக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் மேற்கொண்டார். விமானம் ஓடுதளத்திற்கு சென்று பறக்க தயாரானது. அப்போது சஞ்சய் குமாரிடம் கடத்தல் தங்கம் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து விமானம் மீண்டும் திரும்பி வந்தது.

அப்போது வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது ரூ. 16 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டிக்கெட் அவரது மகன் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. விசாரணையில், இந்த நகைகள் துபாய்க்கு ஏற்றுமதி செய்வதற்காக அவரது மகன் கொல்கத்தா விமானநிலையத்திற்குள் ஏற்கனவே கொண்டு சென்றதும், இதற்காக எமிரேட்ஸ் விமானத்தில் மகன் பெயரில் கொல்கத்தாவில் இருந்து துபாய் செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது.

ஏற்றுமதி செய்யும் தங்கத்தை திசை திருப்பி உள்ளூர் சந்தையில் சங்சய் குமார் விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகையில் கடந்த ஒரு ஆண்டில் ரூ. 300 கோடி மதிப்புள்ள ஆயிரத்து 100 ஏற்றுமதி தங்கத்தை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தந்தையும், மகனையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

மெட்டல்ஸ் அண்டு மினரல்ஸ் டிரேடிங் கார்பரேஷன் ஆப் இந்தியாவில் வாங்கப்படும் ஏற்றுமதி தங்கத்திற்கு 10 சதவீத வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள இத்தகைய செயலில் நகை வியாபாரி ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.