டில்லி:

பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ரெயில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘ சமீபத்தில் நடந்த மூத்த அதிகாரிகளுடனான சிறப்பு கூட்டத்தில் ரெயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கலந்து கொண்டார். அப்போது, தேவைக்கேற்ப ரெயில் கட்டணத்தை மாற்றிக் கொள்ளும் முறை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பண்டிகைக் காலங்களில், அதிகளவில் மக்கள் ரயில் பயணத்தை விரும்புவர்.

அப்போது தேவையை பொறுத்து ரெயில் கட்டணத்தை அதிகரிக்கலாம். விரும்பப்படாத நேரங்களில், வழித்தடங்களில் செல்லும் பயணிக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கலாம் என்று கூட்டத்தில் ஆலோசனை கூறப்பட்டது’’ என்றனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘ நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடையும் ரெயில்களில் பயணம் மேற்கொள்வதை பயணியர் தவிர்ப்பது வழக்கம். அதேபோல் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைவதில், பயணியர் தயக்கம் காட்டுகின்றனர் என் தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்ற ரயில் பயணங்களுக்கு 10 -முதல் 30 சதவீத கட்டண சலுகை அளிக்கலாம். பண்டிகைக் காலங்களில் 10 -முதல் 20 சதவீதம் கட்டணத்தை உயர்த்தலாம் என்று விவாதிக்கப்பட்டது. இதில், அதிவிரைவு ரெயில்களை தேர்வு செய்யும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். பயணியருக்கு மிச்சமாகும் நேரத்துக்கு ஏற்ப கட்டண உயர்வை அமைக்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது’’ என்று தெரிவித்தனர்.