கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவில் இருந்து  குணம் அடைந்தவர்களின் பிளாஸ்மாவை எடுத்து சிகிச்சை அளிக்க ஐ.சி.எம்.ஆர். பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.

கொரோனாவில் இருந்து குணம் அடைந்த கோவையை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் பிளாஸ்மா தானம் வழங்கினார். மேலும், 5 பேர் பிளாஸ்மா தானம் வழங்க முன்பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கோவை அரசு மருத்துவமனை டீன் (பொறுப்பு) காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.