கொரோனாவுக்கு,’பிளாஸ்மா’ சிகிச்சை… ஆய்வை தொடங்கியது தமிழகஅரசு…

சென்னை:

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைய பிளாஸ்மா சிகிச்சை சிறப்பாக இருப்பதாக டெல்லி உள்பட பல மாநில அரசுகள் தெரிவித்த நிலையில், தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சை குறித்து ஆய்வுகள் தொடங்கி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

‘பிளாஸ்மா’ சிகிச்சைக்கான முதற்கட்ட ஆராய்ச்சி, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை யில் தொடங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவரின் உடலில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அவர்களது நோய் எதிர்ப்பு அணுக்களை அடையாளம் கண்டு, அவற்றை பிரித்தெடுத்து, கொரோனா பாதிப்புள்ள நோயாளிகளுக்கு கொடுத்து, சிகிச்சை அளிக்க முடியும். இந்த சிகிச்சையே பிளாஸ்மா சிகிச்சை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இதுபோன்ற சிகிச்சை  ‘மெர்ஸ், சார்ஸ்’ போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு அளித்தபோது,  பிரமிக்கத்தக்க பலன் கிடைத்ததாக கூறப்படுகிறது. எனவே, அதுபோல சிகிச்சை அளிக்க கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி சென்னை சென்னை ராஜிவ் காந்தி, மதுரை, நெல்லை, வேலுார் அரசு மருத்துவமனை களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதுகுறித்து கூறிய  சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை  ரத்த வங்கி தலைவர் டாக்டர் சுபாஷ் கூறும்போது, மத்தியஅரசின் அனுமதியைத் தொடர்ந்து, பிளாஸ்மா சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சி தொடங்கி உள்ளது. இதன்மூலம் பிளாஸ்மா சிகிச்சைக்கான சாதக, பாதகங்கள் குறித்து தெரியவரும். அந்த ஆராய்ச்சி முடிவு அறிக்கை, மத்திய அரசுக்கு அனுப்பப்படும். ஆராய்ச்சியில் நல்ல தீர்வு கிடைத்தால், பிளாஸ்மா சிகிச்சைக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கும். இந்த ஆராய்ச்சியின்படி, சிகிச்சை செயல்பாட்டிற்கு வர,  குறைந்தது 6 மாதங்களாவது ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.