டில்லி

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை இன்னும் சோதனை அளவில் உள்ளதால் இதைச் செய்யக்கூடாது என மத்திய அரசு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

எந்த ஒரு நோய்த் தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா அந்த தொற்றை எதிர்த்துப் போராடும் சக்தி உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.   இதையடுத்து கொரோனாவால்  பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோரின் ரத்தத்தில் இருந்து ப்ளஸ்மா எடுக்கப்பட்டு அதைக் கொண்டு கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்த முடியும் என கூறப்பட்டது.

டில்லி உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இந்த சிகிச்சை சோதனை அடிப்படையில் நடந்துள்ளது.  டில்லியில் பிளாஸ்மா சிகிச்சையில் நால்வர் குணம் அடைந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.   இந்த சிகிச்சைக்காக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் அனுமதி கேட்டுள்ளன.

மத்திய சுகாதார துறை இணைச் செயலர் லவ் அகர்வால்,” இதுவரை பிளாஸ்மா சிகிச்சை உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது.  இன்றுவரிஅ இது சோதனை அளவில் மட்டுமே உள்ளது.  இந்த சிகிச்சை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் செய்து வரும ஆய்வுகளின் முடிவுகள் இன்னும் வெளியாகாமல் உள்ளது.   இது குறித்து கூடுதல் ஆய்வும் நடந்து வருகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இதற்கு ஓப்புதல் தரும் வரை இந்த சிகிச்சையை செய்யக் கூடாது.  இதனால் கொரோனா நோயாளிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படலாம், ஒரு சிலருக்கு உயிர் இழக்கும் அபாயமும் உண்டாகும்.  எனவே தற்போதைய நிலையில் பிளாஸ்மா சிகிச்சைக்கு சட்டப்படி அங்கீகாரம் அளிக்கப்படாததால் சிகிச்சையை யாரும் செய்யக் கூடாது” என எச்சரித்துள்ளார்.