கரூர் மாவட்டத்தில், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு பாலித்தீன் மீண்டும் தாராளமாக புழக்கத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களுக்கு அரசு தடைவிதித்தது. கரூர் மாவட்டத்திலும் இந்த தடை அமலுக்கு வந்தது. துவக்கம் முதலே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிளாஸ்டிக் தடையை அமலாக்குவதில் சுணக்கம் காட்டிவந்தனர். குறிப்பாக குளித்தலையில் டன் கணக்கில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், மாவட்ட தலைநகரான கரூரில் கூட இந்த அளவுக்கு பறிமுதல் செய்யப்படவில்லை. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பிளாஸ்டிக் தடையை தொடர்ந்து, பாலித்தீன் பறிமுதல் நடவடிக்கை பணியினை தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். ஆனால் ஒருகட்டத்தில், உள்ளாட்சி அதிகாரிகள் தான் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர்களும் தங்களது நவடிக்கைகளை நிறுத்திவிட்டனர்.

அதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில், கடந்த வாரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலையிட்டு பேருந்துநிலைய பகுதிகளில் பறிமுதல் நடவடிக்கையை துவக்கி வைத்தார். அசைவ உணவுக்கூடங்கள், கறிக்கடைகளில் இலையை பயன்படுத்தி வந்த நிலை மாறி தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர்கள் மீண்டும் புழக்கத்திற்கு வந்தது. பாலித்தீன் கவர்களையே பயன்படுத்தாமல் வாழை இலை பாக்குமட்டை தட்டு என மாறியவர்கள் கூட பாலித்தீன் கவர்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர் என்று கிடைத்த புகாரின் அடிப்படையில் அந்நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருந்தார். ஆனால் அடுத்த இரண்டு நாட்களிலேயே மீண்டும் பாலித்தீன் பயன்பாடு அதிகரித்தது. குறிப்பாக, கையேந்திபவன்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்களின் பாலித்தீன் பயன்பாடு அதிகமானது.

அத்தோடு, தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து வந்த கட்சி நிர்வாகிகள் கரூரில் முகாமிட்டிருந்ததால், அதிக அளவில் பாலித்தீன் பயன்படுத்தப்பட்டுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. இதனால், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்றும், உத்தரவை அதிகாரிகளே காற்றில் பறக்கவிட்டால்,  மழைநீர் சேகரிப்பு திட்டம் போல ஒப்புக்கான திட்டமாக இது மாறிவிடும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.