பிளாஸ்டிக் தடை : அநியாய அபராதத்தால் தவிக்கும் மும்பை வியாபாரிகள்

மும்பை

காராஷ்டிரா அரசு விதித்த பிளாஸ்டிக் உபயோகத் தடையை ஒட்டி மாநகர அதிகாரிகள் அனுமதிக்கப்பட்ட பொருட்களுக்கும் அபராதம் விதிக்கின்றனர்.

மூன்று தினங்களுக்கு முன்பு திரும்ப உபயோகப்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்களான கேரி பேக், டம்பளர்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு மகாராஷ்டிரா அரசு தடை விதித்தது.    அதை ஒட்டி மும்பை மற்றும் புறநகர் பகுதிகளான செம்பூர், காட்கோபர் மற்றும் முலுந்த் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.   இந்த சோதனையை மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் நடத்தினர்.

அப்போது ஒரு சில இடங்களில் அனுமதிக்கப்பட்ட பொருட்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து ஒரு பழக்கடைக்காரர், “ நான் எனது கடையில் பழங்கள் வைக்க 5 பிளாஸ்டிக் கூடைகளை வைத்துள்ளேன்.  அவை தடை செய்யப்பட்டவைகள் அல்ல.    ஆயினும் அதிகாரிகள் எனக்கு ரூ.5000 அபராதம் விதித்தனர்.   நான் அவை அனுமதிக்கப்பட்டவை என எடுத்துக் கூறினேன்.   அவர்கள் ஒப்புக் கொள்ளாமல், எதிர்த்துப் பேசினால் ஒவ்வொரு கூடைக்கும் ரூ.5000 அபராதம் விதிப்பதாக கூறினார்கள்.  வேறு வழியின்றி அவர்கள் முதலில் கேட்ட ரூ.5000 அபராதம் கொடுத்துவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் கடைகளில் உபயோகப்படுத்தப் படும் மறு சுழற்சி செய்யக்கூடிய பல பிளாஸ்டிக் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ள பட்டியலில் உள்ளன.

மும்பை கார்ப்பரேஷன் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தடையில் கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சொல்லி வருகிறது.   அதே நேரத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இணையான விலை குறைவான பொருட்கள் கிடைப்பதில்லை என மக்கள் கூறுகின்றனர்.   உதாரணமாக திருமணங்களில் யூஸ் அண்ட் த்ரோ வகையிலான பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் ஸ்பூன்கள் மட்டுமே உபயோகப் படுத்தப் படுகின்றன.   அதற்கான மாற்றுப் பொருட்கள் இன்னும் உருவாக்கபடவில்லை.

மும்பையின் முலுந்த் பகுதியில் உள்ள சித்திவிநாயக் ஸ்டோர் என்னும் மளிகைக் கடை உரிமையாளர், “தற்போது பிளாஸ்டிக் கேரி பேகுக்கு பதிலாக பிரவுன் கலர் காகிதப் பைகள் உபயோகிக்கிறோம்.  அவை ஒரு கிலோவுக்கு ரூ. 82 விலை ஆகிறது.  சராசரியாக ஒரு பையின் விலை ரூ.2.25 ஆகிறது.   நாங்கள் அதிக மதிப்புள்ள பொருட்கள் வாங்குபவர்களுக்கு மட்டுமே இத்தகைய பைகளை அளிக்கிறோம்.     இதனால் வாடிக்கையாளர்கள் எங்கள் மேல் கோபம் கொள்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கை பெரிய கடைகளை மட்டுமின்றி சாலை ஓர காய்கறி, பழ வியாபாரிகளை கடுமளவில் பாதித்துள்ளது.   அரசு இதற்கு ஒரு மாற்று வழியை விரைவில் அறிவிக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த வர்த்தகர்களின் ஒரே வேண்டுகோளாக உள்ளது.

You may have missed