மகாராஷ்டிராவில் மளிகை கடைக்கு பிளாஸ்டிக் தடையில் இருந்து தளர்வு

மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து மளிகை கடை போன்ற ஒருசில சிறு விற்பனைக்கு பிளாஸ்டிக்  தடையில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநில  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராம்தாஸ் கதம் தெரிவித்து உள்ளார்.

சில்லறை விற்பனை செய்யும் மளிகை கடைகள்,  எண்ணெய், அரிசி, சர்க்கரை, போன்ற தளர்வான தயாரிப்பு களை விற்கும் பொதுவான கடைகள் போன்றவற்றிற்கு  பிளாஸ்டிக் தடை தளர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை தளர்வு இன்று முதல் (ஜூன் 28)அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில்  கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி பிளாஸ்டிக் பொருட்கள் வாங்க, விற்க, உபயோகப் படுத்த  தடை விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பை, ஸ்பூன், தட்டு, பாட்டில் மற்றும் தெர்மாகோல் போன்றவை களும்  தடை செய்யப்பட்டுள்ளன.

அதைத்தொடர்ந்து ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் விற்பனைக்கு  வைத்திருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பதற்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் ஜூன் 23ந்தேதி உடன் முடிவடைந்தது.

அதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. தவிர தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால்  முதல் முறை பிடிபடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், 2வது முறை பிடிபடுபவர்களுக்கு ரூ.10, ஆயிரம் அபராதமும், 3வது முறை பிடிபட்டால் ரூ.25 ஆயிரமும் அபராதம் மற்றும் மூன்று மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப் பட்டிருகிறது.

அதுபோல  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு சில விதி விலக்குகளும் அறிவிக்கப்பட்டன. பால், மருத்து பொருட்கள், ஏற்றுமதி செய்வதற்கு தேவையான பைகள், திடக்கழிவுகளை கையாளும் பைகள் போன்றவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இது மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தடை காரணமாக  மாநிலத்தில் ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 3 லட்சம் நபர்கள் வேலை இழந்திருப்பதாகவும் பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர் சங்கத்தலைவர் கூறியிருந்தார். மேலும் சிறு வணிகர்களுக்கு தடையில் இருந்து விலக்கு வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில அரசு,  மளிகை கடை போன்ற ஒருசில சிறு விற்பனைக்கு பிளாஸ்டிக்  தடையில் தளர்வு செய்யப்படுவதாக  அறிவித்து உள்ளது. சில்லறை விற்பனை செய்யும் மளிகை கடைகள்,  எண்ணெய், அரிசி, சர்க்கரை, போன்ற தளர்வான தயாரிப்பு களை விற்கும் பொதுவான கடைகள் போன்றவற்றிற்கு  பிளாஸ்டிக் தடை தளர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை தளர்வு இன்று முதல் (ஜூன் 28)அமலுக்கு வருவதாக மாநில  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராம்தாஸ் கதம் தெரிவித்து உள்ளார்.