சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கேரள அரசு அதிரடி

--

திருவனந்தபுரம் :

பரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வர கேரள அரசு தடை விதித்துள்ளது.

சபரிமலை அய்யப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக சபரிமலை பகுதி பிளாஸ்டிக் பொருட்களால்  சுகாதரமற்று  இருப்பதாகவும், இதன் காரணமாக வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக கேரள உயர்நீதி மன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கில், கேர உயர்நீதி மன்றம் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை  விதித்துள்ளது.

அதைத்தொடர்ந்து பத்தணம்திட்டா மாவட்ட கலெக்டர்‘ ‘மிஷன் கிரீன் சபரிமலா’ என்ற திட்டத்தை துவக்கி, சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதித்து, பக்தர்கள் ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையிலும் சபரி மலை பகுதிகளில் பக்தர்கள் கொண்டு வரும் உணவு பொருட்கள் மற்றும் எண்ணை பாட்டில்கள், பாலிதீன் பைகள் போன்றவற்றால் சுகாதாரம் பாதிக்கப்படுவது தொடர்ந்தது.

இந்த நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள், பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் டப்பாக்கள் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். அவற்றுக்கு பதில் சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை  பயன்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு, பக்தர்கள் பூரண ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்து உள்ளது.

இந்த தடை இந்த வருட மண்டல கால பூஜையில் இருந்தே அமல்படுத்தப்படுவதாகவும்,  சபரி மலை அய்யப்பன் கோவில் வளாகத்தை துாய்மையாக வைத்திருக்க அனைவரும் ஒத்து ழைக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.